எம்ஜிஆர் விளிம்புநிலை மக்களுக்காக உழைத்தவர்: அண்ணாமலை!

சிறந்த தேசியவாதியான முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் புகழைப் போற்றி வணங்குவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 108வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக முதலமைச்சர் பதவி வகித்து பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டவர். அதேபோல் தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உச்சத்தில் இருந்து பல்வேறு சிறந்த பொழுதுபோக்கு படங்களிலும் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அவரின் பிறந்தநாளினை முன்னிட்டு தமிழக அமைச்சர்கள் தரப்பில் கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். அதேபோல் அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் மரியாதை அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவது:-

தமிழக முன்னாள் முதலமைச்சர், பாரத ரத்னா அமரர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பிறந்த தினம் இன்று. விளிம்புநிலை மக்களை முன்னேற்றுவதில் கவனம் செலுத்தியவர். சுகாதாரம், தொழில் பயிற்சி திட்டங்கள், சுய வேலைவாய்ப்பு திட்டங்கள், கல்வி உட்கட்டமைப்பு, மகளிர் மேம்பாடு, பள்ளி மாணவர்களுக்குச் சத்துணவு திட்டங்களை மேம்படுத்தியவர். ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையும் மேம்படுத்தும் தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தியவர். உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி, தமிழைப் பெருமைப்படுத்தியவர். சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த தலைசிறந்த தேசியவாதியான டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.