தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 12 மசோதாக்கள் முடக்கம்: செல்வப்பெருந்தகை!

“தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 12 மசோதாக்கள் கடந்த இரண்டு வருடங்களாக ஒப்புதல் தராமலும், எந்த முடிவும் எடுக்காமலும் முடக்கி வைத்திருக்கிறார்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு எதிர்கட்சிகளால் ஆட்சி செய்யப்படுகிற மாநிலங்களில் ஆளுநர்களின் போக்கு அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக தொடர்ந்து இருந்து வருகிறது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு சட்டசபையில் மசோதாக்களாக நிறைவேற்றி ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்படுகின்றன. அப்படி தமிழக சட்டப்பேரவையால் அனுப்பப்பட்ட 12-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் கடந்த மூன்று வருடங்களாக ஆளுநர் ஆர்.என்.ரவியால் எந்த முடிவும் எடுக்கப்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களை சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பப்பட்டு அவை மறுபடியும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை கடந்த 18 நவம்பர் 2023-ல் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் போதே மசோதாக்களை முடக்குகிற நோக்கத்தில் ஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டிருப்பது அப்பட்டமான காலம் தாழ்த்துகிற முயற்சியாகும்.

இந்நிலையில் தான் தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தி வருவதற்கு தீர்வு காண்கிற வகையில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்தது. நேற்று அந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.பி. பர்திவாலா தலைமையிலான அமர்வு ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் வாய்மொழி உத்தரவின்படி இன்னும் ஒருவார காலத்துக்குள் நிலுவையில் உள்ள மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உச்ச நீதிமன்றமே அதுகுறித்து முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று ஆர்.என் ரவியை எச்சரித்திருக்கிறது.

ஏற்கெனவே, கடந்த ஆண்டு 10 நவம்பர் 2023-ல் பஞ்சாப் அரசு ஆளுநருக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் ஆளுநர் காலம் தாழ்த்த முடியாது, நியாயமான காலத்துக்குள் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர வேண்டுமென்று தீர்ப்பு வழங்கியது. அதேபோல, கேரள மாநில அரசு தொடுத்த வழக்கிலும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்புகளில் அரசமைப்புச் சட்ட உறுப்பு 200-ன்படி மாநில சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்புகிற மசோதாக்களுக்கு உரிய காலத்தில் ஒப்புதல் தர வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருப்பதை தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறது. இதனை மீறுகிற வகையில் தமிழக ஆளுநர் அரசியல் உள்நோக்கத்தோடு செயல்பட்டு வருவதை காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பலமுறை கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கின்றன.

ஆனால், தமிழகத்தில் பாஜகவின் ஒரு கிளையாக ஆளுநர் மாளிகையை மாற்றி தமிழக அரசுக்கு எதிராக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஆளுநர் ஆர்.என். ரவி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 12 மசோதாக்கள் கடந்த இரண்டு வருடங்களாக ஒப்புதல் தராமலும், எந்த முடிவும் எடுக்காமலும் முடக்கி வைத்திருக்கிறார். இத்தகைய மசோதாக்களில் உயர்கல்வித்துறை, சிலர் மீது வழக்கு தொடுக்க அனுமதி, சிறை தண்டனை குறைப்பு, அரசு ஆணைகளுக்கான ஒப்புதல் தராமல் நிலுவையில் உள்ளன.

மேலும், பல்கலைக் கழகங்களுக்கு கடந்த மூன்று வருடங்களாக துணை வேந்தர்கள் நியமிக்கப்படாமல் உள்ள நிலையில் அதற்கான தேடுதல் குழுவுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார். மேலும், பல்கலைக் கழக மானியக்குழுவை சேர்ந்த ஒருவர் தேடுதல் குழுவில் இடம் பெற வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறார். இத்தகைய அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளின் காரணமாக தமிழக அரசின் செயல்பாடுகள் முடக்கப்பட்டு வருகின்றன.

தமிழக ஆளுநராக பொறுப்பேற்றது முதற்கொண்டு தமிழக அரசுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிற நிலையில் உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கிற உத்தரவின்படி ஆளுநர் ஒருவாரத்துக்குள் மசோதாக்கள் மீது முடிவெடுக்க வேண்டும். அப்படி முடிவெடுக்கவில்லை என்று சொன்னால் கடும் விளைவுகளை ஆளுநர் சந்திக்க நேரிடும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்திருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறேன்.

தமிழக ஆளுநரை பொறுத்தவரை ஆளுநர் மாளிகையில் தமிழக அரசுக்கு விரோதமாக இணையான ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்த முயற்சிக்கிறார். குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட ஆளுநர், உறுப்பு 163-ன்படி தமிழக அமைச்சரவையின் அறிவுரை மற்றும் ஆலோசனை இல்லாமல் எந்த முடிவையும் எடுக்க முடியாது. அப்படி இருக்கிற நிலையில் அரசமைப்புச் சட்டம் குறித்தும், மதச்சார்பற்ற கொள்கை குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வருகிறார்.

திருவள்ளுவருக்கு எத்தகைய உடை அணிய வேண்டுமென்று அனைத்து தரப்பினரின் ஆலோசனையை பெற்று ஓவியர் வேணுகோபால் சர்மா வரைந்த வெள்ளை உடை அணிந்த திருவள்ளுவர் படத்தை தமிழக முதல்வராக எம். பக்தவச்சலம் இருந்த போது 1964-ல் அன்றைய குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேன் சட்டப்பேரவையில் திறந்து வைத்தார். இந்த படத்தை அனைத்து கட்சியினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்நிலையில் திருவள்ளுவர் படத்துக்கு காவி உடை அணிந்த படத்தை வைத்து நிகழ்ச்சி நடத்தியிருப்பது ஆளுநரின் அகம்பாவத்தையும், ஆணவத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறது. உலக பொதுமறை தந்த திருவள்ளுவருக்கு காவி உடை அணிய வைத்து 8 கோடி தமிழர்களை அவமதித்த குற்றத்தை ஆளுநர் ஆர்.என். ரவி செய்திருக்கிறார். இத்தகைய நடவடிக்கைகளின் மூலமாக தமிழக மக்களின் நலன்கள், உரிமைகளுக்கு எதிராகவும், பண்பாடு, கலாச்சாரத்தை சிறுமைப்படுத்துகிற வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிற ஆளுநர் ஆர்.என். ரவி அப்பதவியை வகிப்பதற்கு எந்த அருகதையும் இல்லாதவர். இத்தகைய தமிழக விரோத போக்கை கடைப்பிடித்து வருகிற ஆளுநர் ஆர்.என். ரவி அப்பொறுப்பிலிருந்து உடனடியாக விலக்கப்பட வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.