திமுகவை பின்பற்ற தொடங்கிவிட்டது பாஜக: கனிமொழி எம்பி!

திமுகவை தற்போது பாஜகவும் பின்பற்ற தொடங்கி இருப்பதாக தூத்துக்குடி எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் பின்பற்றப்பட்டு வருவதாக கூறிய அவர், இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாகவும் கூறியுள்ளார்.

டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜக தரப்பில் ஏராளமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மகளிருக்கு மாதம்தோறும் ரூ.2,500, கர்ப்பணி பெண்களுக்கு ரூ.21,000 மற்றும் 6 ஊட்டச்சத்து தொகுப்பு, மருத்துவக் காப்பீடு உயர்வு, முதியோர்கள் மற்றும் கைம்பெண்களுக்கான உதவித்தொகை உயர்வு, கேஸ் சிலிண்டர் மானியம் மற்றும் தீபாவளி, ஹோலிக்கு இலவச சிலிண்டர் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான வாக்குறுதிகள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரப்படுவது தான். கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி இலவசங்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வந்தார். ஆனால் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக தரப்பிலேயே இலவசங்கள் தொடர்பான வாக்குறுதி அளிக்கப்பட்டிருப்பது அரசியல் கட்சியினரிடையே விமர்சனங்களை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி சென்னையில் நடந்த சென்னை சங்கமம் விழாவிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்புக்கு வந்த பின்னர் கிராமியக் கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கக் கூடிய வகையில் சென்னை சங்கமத்தை தொடங்கி நடத்தி வருகிறார். 8 மாவட்ட தலைநகரங்களில் கிராமிய விழாக்களை நடத்த நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டிருக்கிறார்கள். வரும் காலங்களில் இதனை விரிவுப்படுத்தும் திட்டமும் இருக்கிறது. சென்னை சங்கமம் விழாவிற்கு நாளுக்கு நாள் மக்களிடையே ஆதரவு பெருகி வருகிறது. இது கிராமிய கலைஞர்களுக்கு ஊக்கமாக அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து டெல்லி தேர்தலுக்காக பாஜக அளித்த வாக்குறுதிகள் குறித்த கேள்விக்கு, பாஜக இப்போது திமுகவை பின்பற்ற தொடங்கி இருப்பதாக பார்க்கிறேன். இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு தான் முன்மாதிரியாக இருந்து கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்ற தொடங்கி இருக்கின்றன. தற்போது பாஜகவும் பின்பற்றுகிறது. அதற்கு வாழ்த்துகள் என்று பதில் அளித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை திட்டம் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.