பெரம்பலூர் போலீஸ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிய சிபிஎம் வலியுறுத்தல்!

ரவுடிகளிடம் சமாதானம் பேச தலித் இளைஞரை போலீசார் அழைத்து சென்றதாகவும், இந்த சம்பவத்தின்போது இளைஞர் கொலை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணமாக போலீசார்தான் இருந்திருக்கின்றனர் என்றும், அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து கட்சியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கை.களத்தூர் கிராமம் காந்தி நகரைச் சேர்ந்த மோகன் என்பவரின் மகன் மணிகண்டன் (வயது 30) என்கிற தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொடூரமான இந்த படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

தீண்டாமையின் தொடர்ச்சியாகவே இந்த சாதிய வன்கொடுமை நடந்துள்ளது. இந்த தகராறை ஒட்டி சமாதானம் பேசலாம் என்று குற்றவாளிகளிடம் காவலர்களும், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த ஒருவரும் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இவர்களின் முன்னிலையிலேயே இந்தக் கொலை நடைபெற்றுள்ளது. சட்ட ரீதியாக காவலர்கள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தியிருக்க வேண்டும். மாறாக கொலையாளி தேவேந்திரனிடம் கொலை செய்யப்பட்டவரை அழைத்துச் சென்றதன் மூலம் காவலர்களும் அந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்துள்ளனர். குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்வதோடு, இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த காவல்துறையினர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு சட்டரீதியான இழப்பீடும் அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டுமென்றும், இத்தகைய நிகழ்வுகளில் சட்டத்திற்குப் புறம்பாக குற்றவாளிகளுக்கு உடந்தையாக காவல்துறை செயல்படுவதைத் தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் முதன்மை குற்றாவளியாக தேவேந்திரனை போலீசார் குறிப்பிட்டுள்ளனர். மணிகண்டனும், தேவேந்திரனும் நெல் அறுவடை இயந்திர வாகனத்தின் ஓட்டுநராக பணியாற்றி வருந்திருக்கின்றனர். அறுவடை காலம் என்பதால் இயந்திரத்திற்கும், அதை இயக்கும் ஓட்டுநருக்கும் நிறைய தேவை இருந்திருக்கிறது. எனவே இருவருக்கும் இடையே தொழில் போட்டி இருந்தாக சொல்லப்படுகிறது. இவர்களுக்கு இடையில் ஏற்கெனவே முன்விரோதம் இருந்த நிலையில், தற்போது பிரச்சனையாக வெடித்துள்ளது. எனவே மணிகண்டன், தேவேந்திரன் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணை செய்ய வேண்டிய போலீசார், வழக்கை வாபஸ் பெற வைக்க மணிகண்டனிடம் சமாதானம் பேசியதாகவும், அவரை அழைத்துக்கொண்டு தேவேந்திரன் இருக்கும் இடத்திற்கு சென்றதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் சமாதானம் செய்ய தயாராக இல்லாத தேவேந்திரன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மணிகண்டனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், மணிகண்டன் சம்பவ இடத்திலேயே சரிந்து விழ, அவரை அழைத்து வந்த.. கை.களத்தூர் காவல் நிலையத்தின் தலைமை காவலர் ஸ்ரீதர், ஊர்க்காவல் படையை சேர்ந்த பிரபு ஆகியோர், மணிகண்டனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். ஆனால் மணிகண்டன் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இந்த சம்பவத்தையடுத்து மணிகண்டனின் உடலை கை.களத்தூர் காவல் நிலையத்திற்கு முன்னர் வைத்து உறவினர்களும், ஊர் மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார், பெரம்பலூர் எஸ்.பி. ஆதர்ஷ் பசேரா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதானம் பேசியுள்ளனர்.