ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில், திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெறுகிறது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி என்பதால், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 5-ந்தேதி நடைபெறும் என்று கடந்த 7-ந்தேதி அறிவிக்கப்பட்டது. அன்றைய தினமே தேர்தல் நடத்தை விதிகளும் அமலாகின. 10 ஆம் தேதி முதல் 17-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்படி முதல் நாளான 10-ந்தேதி சுயேச்சை வேட்பாளர்கள் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 11 மற்றும் 12-ந்தேதி விடுமுறை தினம் ஆகும். அதைத்தொடர்ந்து 13-ந்தேதி 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். பின்னர் பொங்கல் பண்டிகையையொட்டி 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டது. அன்றைய தினம் வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை.

நேற்று தான் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதனால், நேற்று பலரும் போட்டி போட்டுக்கொண்டு வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டது. திமுக வேட்பாளராக போட்டியிடும் வி.சி. சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர். அதேபோல் சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் ஆர்வமுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர். 3 மணிக்கு முன்பாக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் 49 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஏற்கனவே 9 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மொத்தம் 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஒரு சிலர் மாற்று வேட்பாளர் உள்பட 2 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதன்படி 58 பேரிடம் இருந்து மொத்தம் 65 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற உள்ளது. வேட்புமனுக்களை வாபஸ் பெற வருகிற 20-ந்தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னத்துடன் வெளியிடப்படும். அடுத்த மாதம் 5- ம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும், 8-ந்தேதி சித்தோடு அரசு என்ஜினியரிங் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.