கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலையில் சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு!

கொல்கத்தா ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று சீல்டா மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரங்களை ஜன.20ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது உடலில் 25 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும், கழுத்து நெரிக்கப்பட்டதால் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார் என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று (ஜன.18) தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோரும் நீதிமன்ற வளாகத்தில் இருந்தனர்.

நீதிபதி அனிர்பன் தாஸ் தனது தீர்ப்பில், சிபிஐ முன்வைத்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. பிஎன்எஸ் பிரிவுகள் 64, 66 மற்றும் 103(1) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி. இதற்கு அதிகபட்சமாக மரண தண்டனையும், குறைந்தபட்சமாக ஆயுள் தண்டனையும் இருக்கும் என்று அறிவித்தார்.

தீர்ப்பை வாசித்தபோது, எப்போதும் போல அப்பாவியாக முகத்தை வைத்திருந்த சஞ்சய் ராய், நீதிமன்றத்துக்குள்ளேயே தான் ஒரு அப்பாவி என்றும், ஒரு ஐபிஎஸ் அதிகாரிக்கு இந்த கொலையில் தொடர்பிருப்பதாகவும் கத்தியதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

நான் தவறுதலாக வழக்கில் சிக்கவைக்கப்பட்டுவிட்டேன், இதனை நான் செய்யவில்லை. உண்மையில் இதனை செய்தவர்களை விட்டுவிட்டார்கள். இதில் ஒரு ஐபிஎஸ் அதிகாரிக்கும் தொடர்பிருக்கிறது என்று கூச்சலிட்டதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டிருக்கிறது. நான் எப்போதும் என் கழுத்தில் ருத்திராட்சம் இணைக்கப்பட்ட சங்கிலியை அணிந்திருப்பேன். ஒருவேளை இந்தக் குற்றத்தை நான் செய்திருந்தால், அங்கேயே என் செயின் அறுந்து விழுந்திருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை. இந்தக் குற்றத்தை என்னால் செய்திருக்க முடியாது என்றும் அவர் கத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் தீர்ப்பு வெளியானதும், ஆர்ஜிகர் மருத்துவமனை மருத்துவர்கள் சிலர் ஏஎன்ஐ செய்தியாளர்களிடம் பேசுகையில், மருத்துவமனை நிர்வாகம் சம்பவம் நடந்ததும் ஆதாரங்களையும் சாட்சிகளையும் அழித்துள்ளது. இந்த சஞ்சய் ராயைக் காப்பாற்றவா இதனைச் செய்தது. இதில் வேறு சிலருக்கும் தொடர்பிருக்கிறது. அதனைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அக்டோபர் 7, 2024 அன்று இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், சீல்டாவில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் தினசரி விசாரணையை நடத்தியது. விசாரணை தொடங்கி 57 நாட்கள் நிறைவு பெற்ற நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாகவில்லை. ஒரே குற்றவாளி சஞ்சய் ராய் என்று சிபிஐ ஆரம்பத்தில் இருந்து கூறி வருகிறது.