நாடு முழுக்க ஒரே தேர்தல் என்று சொல்றவர்கள், காலப்போக்கில் நாட்டுக்கே ஒரே தேர்தல் என்று சொல்லும் நிலையை உருவாக்க நினைக்கிறார்கள். இது ஒற்றை ஆட்சிக்கு தான் வழிவகுக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திமுக சட்டத்துறை சார்பாக 3வது மாநில மாநாடு சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. இதனை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடியேற்ற, அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், என்.ஆர்.இளங்கோ, திமுக எம்பி ஆ.ராசா உள்ளிட்ட பலரும் கருத்தரங்கில் உரையாற்றினர். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டத்துறை மாநாட்டில் சிறப்புரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது:-
எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட போது நான் உட்பட பலரும் சிறையில் அடைக்கப்பட்டோம். வெளியில் இருந்த பலரும் சிக்கலை சந்தித்தார்கள். அவர்கள் அனைவரையும் பாதுகாத்த துறை தான் சட்டத்துறை. கடந்த கால அதிமுக ஆட்சியில் காழ்ப்புணர்ச்சியோடு போடப்பட்ட வழக்குகளை எதிர்கொண்டிருக்கிறோம். அதற்கு உறுதுணையாக இருந்தது சட்டத்துறை தான். அண்ணா அறிவாலயம் கட்டவே அனுமதியில்லை என்று தடை போட்டார்கள். அந்த தடையை உடைத்தது சட்டத்துறை தான். இவ்வளவு ஏன், கருப்பு சிவப்பு கொடிக்கும், உதயசூரியன் சின்னத்திற்கும் சிக்கல் வந்தது. அதனை மீட்டு தந்ததும் இந்த சட்டத்துறை தான். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைந்த பின், அண்ணாவுக்கு அருகில் உறங்க போராடினோம். இது சட்டத்துறை மட்டுமல்லாமல் சாதனை துறையாகவும் மாறியது. இது வழக்கறிஞர் அணி அல்ல.. கழகத்தை காக்கின்ற அணி. நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி பின்பற்றப்பட வேண்டும் என்ற உடையாடலை சட்டத்துறை தொடங்க வேண்டும்.
அதேபோல் மத்திய பாஜக அரசை பொறுத்தவரை ஒரே மதம், ஒரே மொழி, ஒரே உடை, ஒரே பண்பாடு, ஒரே உணவு என்று ஒற்றை பண்பாட்டை நோக்கி நாட்டை நகர்த்த பார்க்கிறது. அதற்காக தான் ஒரே தேர்தல் என்று கிளம்பி இருக்கிறார்கள். ஒரே அரசு என்ற நிலையை உருவாக்குவதற்காக மாநிலங்களை அழிக்க பார்க்கிறார்கள். பாஜகவை பொறுத்தவரை குறுகிய கால செயல்திட்டமாக இருக்காது. நீண்ட கால செயல்திட்டமாக தான் இருக்கும். நாடு முழுக்க ஒரே தேர்தல் என்று சொல்றவர்கள், காலப்போக்கில் நாட்டுக்கே ஒரே தேர்தல் என்று சொல்லும் நிலையை உருவாக்க நினைக்கிறார்கள். இது ஒற்றை ஆட்சிக்கு தான் வழிவகுக்கும். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இது தனி மனிதன் ஒருவரிடம் அதிகாரத்தை கொண்டு போய் சேர்க்கும். பாஜக என்ற கட்சிக்கு கூட நல்லதல்ல. இன்று பிரதமராக உள்ள நரேந்திர மோடியை சர்வாதிகாரியாக மாற்றுவதற்கு தான் பயன்படும். இதில் அரசியல் காரணங்களுக்காக பாஜகவை ஆதரிக்கிற கூட்டணி கட்சிகள் விழுந்துவிடக் கூடாது. இந்த சட்டத்தை ஆதரிக்க கூடாது என்று இந்த கூட்டத்தின் மூலமாக கோரிக்கை வைக்கிறேன்.
பாஜக ஆட்சிக்கு ஆதரவு கொடுங்கள். அது உங்களின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் இந்தியாவில் கூட்டாட்சிக்கு முரணான சட்டங்களை ஆதரிக்க கூடாது. இப்படியொரு சட்டத்தை அறிவித்த போது, அரசியல் இயக்கங்களை கடந்து வெளியில் இருந்து எதிர்த்தவர் முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி அவர்கள் தான். பலமுறை தேர்தல் நடத்துவதால், தேர்தல் செலவுகள் அதிகமாகிறது என்று பாஜக கூறிய போது, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் தான் அதிக செலவாகும். தேர்தலுக்கான கருவிகள், பாதுகாப்பும் ஒரே நேரத்தில் தேவைப்படும் போது அதிகமாக தான் செலவாகும் என்று தெரிவித்தவர். இந்த சூழலில் கூட்டாட்சியை காப்பதற்காக ஒரே நாடு, ஒரே தேர்தலை இறுதி வரை எதிர்த்தாக வேண்டும். ஏனென்றால் முன்பு சொன்னதை போல் பாஜகவின் செயல் திட்டங்கள் நீண்ட காலத்திற்கானது. தங்களின் செயல் திட்டங்களுக்கு இடையூறாக இருப்பவர்களுக்கு எதிரான கருத்து உருவாக்கி மெதுவாக சமூகத்தில் விதைக்க பார்க்கிறார்கள். அதற்கு துணையாக சில எடுபிடிகளை பேச வைப்பார்கள். மீடியாக்களை வைத்து பொய் செய்திகளை பரப்புவார்கள். கொச்சைப்படுத்துவார்கள், பாஜகவின் வாட்ஸ் அப் யுனிவர்சிட்டி தீயாய் வேலை செய்யும். அதனை எதிர்த்து தான் நாம் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.