தேசிய விழாவாக கொண்டாடப்படும் காசி தமிழ் சங்கமம்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

காசி தமிழ் சங்கமம் நிகழ்வானது தேசிய விழாவாக கொண்டாடப்பட்டு வருவதாக ஆளுநர் ஆர். என்.ரவி கூறினார்.

தமிழகத்துக்கும், வாராணசிக்கும் இடையேயான தொடர்பை வலுப்படுத்தும் விதமாக காசி தமிழ் சங்கமம் நிகழ்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. தொடர்ந்து 3-வது காசி தமிழ் சங்கமம் பிப்.15 முதல் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்த தொடக்க நிகழ்ச்சி சென்னை தரமணியில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

காசி தமிழ் சங்கமம் தேசிய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டும் காசி தமிழ் சங்கமம் பெரியளவில் வெற்றியடையும். காசி என்பது மினி இந்தியா. இந்தியா முழுவதும் இருந்து ஒரு நாளைக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் அங்கு வருகிறார்கள். கை, கால், கண் என உறுப்புகள் பிரிந்தால் உடல் முழுமை அடையாது. அதே போல், மாநிலங்கள் பிரிந்தால் நாடு ஒன்றிணைய முடியாது. மாநிலங்கள் அனைத்தும் இணைந்ததுதான் இந்தியா. உலகளவில் 3-வது பொருளாதார நாடாக விரைவில் இந்தியா வளர்ச்சி அடைய உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சி அமைந்த பிறகு நாடு சிறப்பான வழியில் வெற்றியை நோக்கி பயணித்து வருகிறது.

ராணுவம், அறிவியல், தொழில்நுட்பம், கல்வி என அனைத்து துறைகளும் சுயசார்பு பெற்று வளர்ச்சி அடைந்து வருகின்றன. காசிக்கும் தமிழகத்துக்கும் பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்புகள் உள்ளன. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பழமை மாறாமல் தொடர்ந்து நடைபெறும். இந்தியா சனாதன நாடு என்பதற்கு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி சிறந்த எடுத்துக்காட்டு. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி பேசியதாவது:-

ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற திட்டத்தின்கீழ் தமிழகத்தில் உள்ள மக்களுக்கு காசி பற்றிய புரிதலை ஏற்படுத்தும் விதமாக காசி தமிழ் சங்கத்தை நடத்தி வருகிறோம். நடப்பாண்டு உத்தரப்பிரதேசத்தின் பிராயாக்ராஜ் என்ற இடத்தில் மகா கும்பமேளா நடைபெற உள்ளது. விநாடி வினா போட்டி: தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதில் பங்கேற்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் சேர்த்து நடத்தப்பட இருக்கிறது. இதில் பங்கேற்பவர்கள் 2 நாட்கள் ரயில் பயணத்துக்கு பின்பு, வாராணசி, பிராயாக்ராஜ், அயோத்தி சென்று கலாச்சாரம், கல்வி நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு மீண்டும் சென்னை திரும்புவர்.

இதற்கு விவசாயிகள், பெண்கள் உட்பட 5 பிரிவுகளாக 1,100 பேர் அழைத்து செல்லப்பட உள்ளனர். அவர்களை ‘ரேண்டம்’ முறையில் தேர்வு செய்வோம். இதற்காக ஒரு விநாடி வினா போட்டியும் நடத்தவுள்ளோம். ‘தமிழர் மரபில் காசி என்ற செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் புத்தகத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். இந்த போட்டியின் முடிவும் தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்காக இருக்கும்.

இந்த பயணத்தின்போது அகத்திய முனிவரை முன்னிலைப் படுத்தும் விதமாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோயில் குறித்த கண்காட்சித் தொகுப்பும் இடம் பெறும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை http://kashitamil. itm.ac.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.