அமைதிப்படை ‘அமாவாசை’தான் எடப்பாடி பழனிசாமி: செந்தில் பாலாஜி!

அமைதிப்படை அமாவாசைதான் எடப்பாடி பழனிசாமி. இன்னும் 100 பவுர்ணமிகளுக்கு மு.க.ஸ்டாலின் தான் முதல்-அமைச்சராக தொடர்வார் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

நாம முன்னுக்கு வரணும்னா நாய் என்ன… மனுஷன் என்ன? ஏறி மிதிச்சு போயிட்டே இருக்கணும் ‘அமைதிப்படை’ படத்தில் வரும் டயலாக் இது. அதில் வரும் ‘அமாவாசை’ கேரக்டர் தான் எடப்பாடி பழனிசாமி. பலரை ஏறி மிதித்து, ஊர்ந்து சென்று, பதவியைப் பிடித்த பழனிசாமி, திமுக ஆட்சிக்கு இன்னும் 13 அமாவாசைதான் இருக்கிறது என நேற்று பேசியிருக்கிறார்.

ஆட்சியை இழந்த இந்த நான்கு ஆண்டுக் காலத்தில் அமாவாசையையென உருட்டியே அரசியல் செய்து கொண்டிருக்கிறார் பழனிசாமி. 2024-ம் வருடம் சட்டசபைக்கும் தேர்தல் வரும். இன்னும் 27 அமாவாசைகள் மட்டுமே ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருக்க முடியும். மீண்டும் அதிமுக அரசு தமிழகத்தில் அமையும் – 2022 பிப்ரவரி 12. சேலம், தாரமங்கலம். இன்னும் 28 அமாவாசைகள் மட்டுமே திமுக அரசு ஆட்சியில் இருக்கும் – 2024 ஜனவரி 25. எக்ஸ் தள பதிவு….. திமுக ஆட்சியின் ஆயுட் காலம் 19 அமாவாசைகள்தான். நாட்கள் எண்ணப்படுகின்றன – 2024 செப்டம்பர் 20. எக்ஸ் தளப்பதிவு.

இப்படி ஒவ்வொரு அமாவாசைக்கும் எடப்பாடி பழனிசாமி கணக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார். அமாவாசைகள்தான் கடந்து சென்று கொண்டிருக்கின்றன. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடாமல் புறமுதுகிட்டு ஓடும் 23-ம் புலிகேசி எடப்பாடி பழனிசாமி, இன்னும் 100 பவுர்ணமிகளுக்கு மு.க.ஸ்டாலின்தான் முதல்-அமைச்சராக தொடர்வார் என்பதை 2026ல் உணர்ந்து கொள்வார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.