ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக நாம் தமிழர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. திமுகவினர் உதயசூரியன் சின்னத்துடன் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்திலேயே போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து கடந்த 2023ஆண்டு இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் கடந்தாண்டு அவர் மறைவடைந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு 2வது முறையாக இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஒரே ஆட்சி காலத்தில் மூன்று முறை தேர்தல்களை சந்தித்தவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் என்ற புதிய சாதனை படைக்க இருக்கின்றனர்.
பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்து உள்ள நிலையில் திமுக முதல் ஆளாக தனது வேட்பாளரை அறிவித்தது. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார். அவரை எதிர்த்து தமிழகத்தின் ஒரே கட்சியாக நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என சீமான் அறிவித்ததோடு, சீதாலட்சுமியை வேட்பாளராக அறிவித்திருக்கிறார்.
சீதாலட்சுமியும் வேட்பு மனு தாக்கல் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். உதயசூரியன் சின்னம் திமுகவுக்கு பல ஆண்டுகளாக இருப்பது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்குவது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்து தேர்தலுக்கு முன்பாக கரும்பு விவசாயி சின்னம் இருந்த நிலையில் மக்களவைத் தேர்தலின் போது மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது.
இதற்கிடையே கடந்த மக்களவைத் தேர்தலில் பத்து சதவீத வாக்குகளை பெற்றதால் மாநில கட்சியாக நாம் தமிழர் அங்கீகாரம் பெற்றது. ஆனால் சின்னம் இன்னும் ஒதுக்கப்படவில்லை. விவசாயி மற்றும் புலி சின்னங்களை நாம் தமிழர் கேட்ட நிலையில் உயிரோடு இருக்கும் விலங்கு என்ற காரணத்தால் புலி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கவில்லை. மேலும் விவசாய சின்னத்தையும் ஒதுக்க மறுத்தது. தேர்தல் ஆணையம். ஏற்கனவே தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் இருக்கும் சின்னங்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொண்டது.
ஆனால் தேர்தல் ஆணையம் ஒதுக்கிய சின்னங்கள் தங்கள் கட்சியின் கொள்கைகளுக்கு பொருந்தவில்லை எனக் கூறி விவசாயி சின்னத்தையே பெற நாம் தமிழர் கட்சியினர் முயன்று வருகின்றனர். மேலும் தாங்களாகவே ஒரு சின்னத்தை வரைந்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி உள்ளனர். மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரான மம்தா பானர்ஜி தானாகவே ஒரு சின்னத்தை வரைந்து கொடுத்து தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது அதே பாணியை பின்பற்றி விவசாயி சின்னத்தையே சற்று மாற்றி அமைத்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி உள்ளது நாம் தமிழர் கட்சி. இன்று அந்த சின்னத்துக்கு ஒப்புதல் வழங்கப்படும் எனவும், சீமான் அந்த சின்னத்தை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் வேட்புமனு வாபஸுக்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில், நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்திலேயே போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலிலும் மைக் சின்னத்திலேயே நாம் தமிழர் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.