தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசிவரும் ஆரியத்தின் கருவியாக மாறிவிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் சென்ன நீலாங்கரை வீட்டை நாளை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பில் உள்ள 30-க்கும் மேற்பட்ட அமைப்புகள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த உள்ளதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை.ராமகிருட்டிணன் அறிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கோவை. ராமகிருட்டிணன் கூறியதாவது:-
தந்தை பெரியாரைப் பற்றி சீமான் இழிவாகப் பேசியதற்கு ஆதாரம் வேண்டும் என்று 10 நாட்களுக்கு முன்னரே கேட்டிருந்தோம். தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டித்திருந்தன. ஆனால் சீமான் இதுவரை பெரியாரை இழிவுபடுத்தி பேசியதற்கான எந்த ஆதாரத்தையும் தரவில்லை. அத்துடன் மேலும் மேலும் பெரியாரை இழிவுபடுத்தியும் கொச்சைப்படுத்தியும் பொய்யான பரப்புரைகளை செய்து வருகிறார்.
சீமானின் இந்த செயலைக் கண்டித்து நாங்கள் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பில் உள்ள 30-க்கும் மேற்பட்ட அமைப்பினர் நாளை சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த உள்ளோம்.
உலகம் முழுவதும் தந்தை பெரியார் நேசிக்கப்படுகிறார். தமிழ்நாட்டில் இந்த தலைமுறையும் தந்தை பெரியாரை வாசிக்கிறது. சென்னை புத்தகக் கண்காட்சியில் கூட தந்தை பெரியாரின் நூல்கள்தான் அதிக அளவு விற்பனையாகி இருக்கிறது. இப்படி இந்த தலைமுறையும் பெரியாரை நேசித்துக் கொண்டிருக்கும் போதே அவதூறாகப் பேசுகிறார் சீமான். தந்தை பெரியார் ஆரியத்தையே எதிர்த்தார்; ஆரியத்தால் தந்தை பெரியாரை எதிர்கொள்ள முடியவில்லை. அதனால் தற்போது ஆரியத்தின் கருவியாக சீமான் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியும் பாஜகவின் எச்.ராஜாவும் நாங்கள்தான் சீமானை இயக்குகிறோம் என்று போட்டி போட்டுக் கொண்டு சொல்லி வருகின்றனர்.
சீமான் வீடு நோக்கி நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க காரணம், தந்தை பெரியாரை நாம் தமிழர் கட்சி இழிவுபடுத்தவில்லை. சீமான் மட்டும்தான் பெரியாரை இழிவுபடுத்தி வருகிறார். சீமான் மட்டுமே பிரசாரமாகவும் செய்து வருகிறார். ஆகையால்தான் அவரது வீட்டை நாங்கள் முற்றுகையிடுகிறோம். சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட காவல்நிலையங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனால் எதிர்காலத்தில் சீமான் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். காலம் கடந்துவிட்ட போதும் பெரியாரை கொச்சைப்படுத்தி பேசியதற்கு சீமான் இன்னமும் ஆதாரம் தரவில்லை. அப்படி ஆதாரம் இல்லாத போது சீமான் தாம் பேசிய பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும். அதேபோல ஆதாரம் தருவதாக வக்காலத்து வாங்கிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் மன்னிப்பு கேட்கவில்லை. இவ்வாறு கோவை ராமகிருட்டிணன் கூறினார்.