கனிம வளக் கொள்ளையைத் தடுக்கப் போராடி உயிரிழந்த ஜெபகர் அலியின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
சட்ட விரோதமாக மணல் அள்ளுவது, டாஸ்மாக் கடைகள் மூலம் வருமானத்தைப் பெருக்குவது, மதுக் கூடங்களுக்கு அனுமதி வழங்குவது, போதைப் பொருட்களின் புகலிடமாக தமிழ்நாட்டை மாற்றுவது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகள்தான் தமிழ்நாட்டில் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன.
இதுபோன்ற கொடூரச் செயல்களை தனி நபர்கள் தட்டிக் கேட்டால் அவர்களை வெட்டுவது, கொலை செய்வது என்பதும், இதுபோன்ற மாபாதகச் செயல்களை எதிர்த்து அரசியல் கட்சிகள் அறப் போராட்டங்களை மேற்கொண்டால் அவற்றை அதிகார பலம் மற்றும் படை பலத்தைக் கொண்டு அடக்குவது என்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், வெங்கலூரைச் சேர்ந்தவரும், கனிமவளக் கொள்கைக்கு எதிராக போராடி வந்த சமூக ஆர்வலரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் நிர்வாகியுமான ஜெகபர் அலி, பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது லாரி மோதி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கொலைவெறித் தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது.
ஏற்கெனவே, மணல் கொள்ளை தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்தபோது, அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்ற அரசு திமுக அரசு. இதேபோன்று, ஜெபகர் அலியின் உயிரிழப்பு முதலில் விபத்து வழக்காக காட்டப்பட்டு பின்னர் பல தரப்பிலிருந்து வந்த கடும் எதிர்ப்பு காரணமாக அது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதாவது, மணல் கொள்ளைக்கு ஆதரவாக திமுக அரசு செயல்படுகிறது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நிலையில், திமுக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறை இது குறித்து விசாரணை நடத்தினால், உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படமாட்டார்கள் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் நினைக்கிறார்கள். தமிழ்நாட்டில் கனிம வளக் கொள்ளைக்கு எதிராக போராடுபவர்கள், குரல் கொடுப்பவர்கள்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்படுவது என்பது வாடிக்கையாகிவிட்டது. இதற்குக் காரணம், கனிம வளக் கொள்ளையர்கள்மீது மென்மையான போக்கினை திமுக அரசு கடைபிடிப்பதுதான்.
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்திற்கு கனிம வளக் கொள்ளை தொடர்பாக ஜெபகர் அலியால் பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டும் அதன்மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதைப் பார்க்கும்போது, மணல் கொள்ளை மூலம் திமுகவிற்கு மிகப் பெரிய அளவில் கிடைக்க வேண்டியது கிடைக்கிறதோ என்ற சந்தேகம் மக்களிடையே நிலவுகிறது.
சட்டம்-ஒழுங்கை தன்வசம் வைத்திருக்கும் முதல்வர் இனிமேலாவது தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு, கனிம வளக் கொள்ளையை முற்றிலும் ஒழித்துக் கட்டவும், மேற்படி கொலைக்கு காரணமான உண்மைக் குற்றவாளிகளை கண்டறிந்து, அவர்களை விரைந்து சட்டத்தின் முன் நிறுத்தி அதற்குரிய தண்டனையைப் பெற்றுத் தரவும், கனிம வளக் கொள்ளையைத் தடுக்கப் போராடி உயிரிழந்த ஜெபகர் அலியின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.