முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பை மேற்பார்வையிட கண்காணிப்புக் குழு தேவையா அல்லது அணை பாதுகாப்புச் சட்டத்தின்படி நியமிக்கப்பட்ட குழு தொடர வேண்டுமா என்பதைத் தெரிவிக்குமாறு தமிழகம் மற்றும் கேரள அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. இந்த விவகாரம் தொடா்பான விசாரணையையும் பிப்.19-க்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு, கேரள அரசு தொடா்ந்த வழக்குகளை நீதிபதி சூா்யகாந்த் தலைமையிலான அமா்வு நேற்று திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது, அணையின் பாதுகாப்பு ஸ்திரத்தன்மை குறித்து நிபுணா்களைக் கொண்டு ஆய்வு நடத்த வேண்டும் என கேரள அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிட்டாா்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தமிழக அரசு வழக்குரைஞா், ‘முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள விடாமல் கேரள அரசு முட்டுக்கட்டை போடுகிறது. முதலில் அணையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழகத்தை கேரள அரசு அனுமதிக்க வேண்டும்’ என்று கூறினாா்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீா் தேக்குவதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்பதால், அதைப்பற்றி மீண்டும் விவாதிக்க எந்த அவசியமும் இல்லை. இந்த விவகாரத்தில் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள இரண்டு தீா்ப்புகளை ஆய்வு செய்ய வேண்டியதில்லை’ என்று குறிப்பிட்டனா்.
மேலும், ‘அணையை பலப்படுத்தும் கோரிக்கை குறித்து மட்டும் விவாதிக்கலாம். அதற்குப் பதிலாக ஒருவரையொருவா் குற்றம்சாட்டிக் கொள்வதால் எந்தத் தீா்வும் கிடைக்காது. இந்த விவகாரத்தில் அணை கண்காணிப்புக் குழு வேண்டுமா அல்லது அணை பாதுகாப்புச் சட்டப்படி நியமிக்கப்பட்ட குழு தொடர வேண்டுமா என்பதுதான் விவாதப்பொருள். இது குறித்து சம்பந்தப்பட்ட இரு மாநிலங்களும் அடுத்த விசாரணைக்குள் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு பிப். 19-க்கு ஒத்திவைக்கப்படுகிறது’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.