அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் திமுக எம்பியுமான கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் இருந்து ரூ.13.7 கோடியும், அவரது வீட்டில் உடைக்கப்பட்ட லாக்கரில் இருந்து ரூ.75 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருப்பவர் துரை முருகன். திமுகவில் பொதுச்செயலாளராகவும் செயல்பட்டு வருகிறது. இவரது மகன் கதிர் ஆனந்த் வேலூர் திமுக எம்பியாக உள்ளார். இந்நிலையில் தான் ஜனவரி மாத தொடக்கத்தில் கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதைனையை மேற்கொண்டனர். அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான வீடு வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ளது. அதேபோல் கிறிஸ்டியன் பேட்டையில் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நுழைந்து சோதனை செய்தனர். அதேபோல் துரைமுருகனுக்கு மிகவும் நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசன் என்பவரின் வீடு, தொழிற்சாலைகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலின்போது துரை முருகன் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் களமிறங்கினார். அப்போது துரை முருகனுக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான குடோனில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இதில் 11 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அதுதொடர்பாக மீண்டும் கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன் ஆகியோருக்கு சொந்தமான வீடு உள்பட பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர். இந்த அமலாக்கத்துறை சோதனையின்போது கதிர் ஆனந்த் வீட்டில் இருந்த லாக்கரை திறக்க சாவி இல்லை. இதனால் கடப்பாரை கொண்டு லாக்கர்கள் உடைக்கப்பட்டு சோதனை என்பது மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை 3 நாட்கள் தொடர்ந்து நடந்து ஒருவழியாக முடிவடைந்தது. சோதனையின் முடிவில் முக்கிய ஆவணங்கள், சொத்து பத்திரங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை அமலாக்கத்துறை பறிமுதல் செய்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் தான் கதிர் ஆனந்த் வீடு, கல்லூரியில் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப்பணம் குறித்து அமலாக்கத்துறை சார்பில் முக்கிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‛‛வேலூர் திமுக எம்பி கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் ரூ.13.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கதிர் ஆனந்த் வீட்டின் லாக்கரை உடைத்ததில் ரூ.75 லட்சம் சிக்கியது. கல்லூரியில் இருந்து ஷார்ட் டிஸ்க், சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.