வாக்கு அரசியலுக்காக இலவசங்கள் வழங்கினால் கடுமையாக எதிர்ப்போம்: அண்ணாமலை!

மக்கள் நலனுக்காக இலவசங்கள் வழங்கினால் ஏற்றுக்கொள்வோம். வாக்கு அரசியலுக்காக இலவசங்கள் வழங்கினால் கடுமையாக எதிர்ப்போம் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு ரூ.10 லட்சம் கோடி கடனில் இருக்கிறது. இதை கட்டி முடிக்க இன்னும் பல ஆண்டுகளாகும். தி.மு.க. தமிழகத்தில் அடிப்படை தேவைகளுக்கு செலவு செய்வதில்லை. தேவையில்லாதவைகளுக்கு அள்ளித்தெளித்துக் கொண்டிருக்கிறது. நான் தமிழகத்திற்கு வந்திருப்பது அரசியலை தூய்மை செய்வதற்காக. ரூ.3 லட்சம் கோடி பட்ஜெட் போடுகிறார்கள் என்றால், ரூ.60 ஆயிரம், ரூ.70 ஆயிரம் கோடிகள் எதற்காக செலவு செய்கிறார்கள்? என்பதே தெரியவில்லை. மக்கள் நலனுக்காக இலவசங்கள் வழங்கினால் ஏற்றுக்கொள்வோம். வாக்கு அரசியலுக்காக வழங்கினால் அதனை கடுமையாக எதிர்ப்போம்.

தமிழகத்தில் திராவிட ஆட்சியால்தான் அருந்ததிய மக்கள் மருத்துவ படிப்பிற்கு அதிக அளவில் சேர முடிகிறது என அமைச்சர் மதிவேந்தன் கூறி உள்ளார். சுதந்திரம் பெற்று எத்தனை ஆண்டுகள் ஆகிறது? தி.மு.க. 5 முறை ஆட்சியில் இருந்தது. தற்போது 6-வது முறையாக ஆட்சியில் இருந்து வருகிறது. இன்றைக்கும் பட்டியல் சமுதாய மாணவர்கள் கல்வியில் பின்தங்கியுள்ளனர். 75 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் தி.மு.க. பட்டியல் சமுதாய மாணவர்களை உயர்த்துவதற்கு என்ன செய்து உள்ளது? இவ்வாறு அவர் கூறினார்.