மக்களின் வரிப்பணத்தை வீண் ஆடம்பரத்திற்காக விரயமாக்குவதுதான் திராவிட மாடலா? இந்திய ஒன்றிய அரசு நிதி தரவில்லை என்று ஒப்பாரி வைக்கும் திமுக அரசிடம் இப்படி வீணாக விரயம் செய்ய மட்டும் நிதி இருக்கிறதா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:-
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் தமிழ்நாடு அரசின் சார்பில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் தமது தந்தையின் பெயரில் அரங்கம் கட்டுவதற்காக மக்கள் வரிப்பணம் 525 கோடியை வாரி இறைப்பது எவ்வகையில் நியாயமாகும்?
அரசுப் பள்ளிக்கூடங்களைச் சீரமைக்க போதிய நிதியில்லை என்று மாணவர்களின் பெற்றோர்களிடமும், மற்றவர்களிடமும் கையேந்தியதுபோக, தற்போது தனியார் பள்ளி நிர்வாகங்களிடமே கையேந்தும் அவலநிலைக்கு தமிழ்நாடு அரசு தள்ளப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளி தொகுப்பூதிய ஆசிரியர் பெருமக்களைப் பணி நிரந்தரம் செய்து ஊதியம் வழங்க பணமில்லை;
அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க பணமில்லை;
அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தற்காலிக செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய பணமில்லை;
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், பணப்பலன் வழங்க பணமில்லை;
தூய்மைப்பணியாளர்கள், மின்வாரியம், குடிநீர் வாரியம், போக்குவரத்து, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை என்று அரசு ஊழியர்கள் பணி நிரந்தரமும், உரிய ஊதியமும் கேட்டு வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். அவர்களுக்குக் கொடுக்க பணமில்லை!
திமுக தேர்தல் வாக்குறுதியான அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியம் திட்டத்தை நடைமுறைப்படுத்த பணமில்லை;
பொங்கல் விழாவிற்கு குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் கூட வழங்குவதற்குப் பணம் இல்லாத நெருக்கடியான நிதிச்சூழலில் 525 கோடிகளைக் கொட்டி ஆடம்பர அரங்கம் அமைப்பது தேவைதானா? யாரை மகிழ்விக்க இந்த கலையரங்கம்?
சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்குத் தேவையான திட்டங்கள் தொடர்பாக எந்தக் கோரிக்கை வைத்தாலும் நிதிநிலைமை பொறுத்து செய்யப்படும் என்று தட்டிக்கழிக்கும் திமுக அரசு, கலைஞர் பேனா, கலைஞர் நூலகம், கலைஞர் அரங்கம் என்று தங்கள் கட்சியின் முன்னாள் தலைவரின் நினைவைப் போற்றவும், கார் பந்தயம் நடத்தவும் பல நூறு கோடிகளைக் கொட்டுவதற்கு மட்டும் ஏது நிதி? யாருடைய நிதி?
மக்களின் வரிப்பணத்தை வீண் ஆடம்பரத்திற்காக விரயமாக்குவதுதான் திராவிட மாடலா? இந்திய ஒன்றிய அரசு நிதி தரவில்லை என்று ஒப்பாரி வைக்கும் திமுக அரசிடம் இப்படி வீணாக விரயம் செய்ய மட்டும் நிதி இருக்கிறதா? என்ற கேள்விகளுக்குப் பதில் உண்டா?
அறம் சார்ந்த நல்லாட்சியின் மாட்சிமையால் மக்கள் மனதில் நீங்காது நிலைபெற வேண்டுமே தவிர, மக்கள் மறந்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் வலிந்து திணிக்கப்படும், மக்களின் வரிப்பணத்தை வீணாக்கி நிறுவப்படும் இதுபோன்ற வீண் விரய விளம்பர அடையாளங்கள் மண்ணிலும் நீண்டகாலம் நிலைக்காது! மக்கள் மனதிலும் ஒருபோதும் நிலைக்காது! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.