தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தாரைவார்த்துக் கொடுத்து கனிமவளம் மிக்க வாட்ஜ் பேங்க் தீவை பெற்றது ராஜதந்திரம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்து சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளார்.
டிவி சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த செல்வப்பெருந்தகை கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததை நியாயப்படுத்தி பேசியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது, மறைந்த திருமதி இந்திரா காந்தி அவர்களின் ராஜதந்திரம் என்று கூறுகிறார். எங்களுக்கு சில கேள்விகள். கடந்த 30 ஆண்டுகளில், இலங்கை அரசால், பல்லாயிரக்கணக்கான இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தான் அந்த ராஜதந்திரமா? பலநூறு இந்திய மீனவர்கள் நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்டனரே. அதுவும் உங்கள் ராஜதந்திரம் தானா? மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்தார்கள் நம் தமிழக மீனவ சொந்தங்கள். இதுவும் ராஜதந்திரத்தில் தான் அடங்குமா?
கச்சத் தீவை இலங்கைக்கு கொடுத்த மாதிரி.. இலங்கையிடமிருந்து இந்தியா வாங்கிய வெட்ஜ் பேங்க் பற்றி தெரியுமா? கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தபோது, அன்று தமிழகத்தில் ஆட்சியிலிருந்த திமுக, கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்க முழு சம்மதம் தெரிவித்துத் தமிழக மீனவ மக்களுக்குத் துரோகம் செய்ததோடு, கடந்த ஐம்பது ஆண்டுகளாக, ஒவ்வொரு தேர்தலின் போதும், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு, தமிழர்கள் உரிமை, என்றெல்லாம் நாடகமாடிக் கொண்டிருக்கிறது. அப்போதெல்லாம் இந்த ராஜதந்திரத்தைப் பற்றித் திமுக காங்கிரஸ் கூட்டணி பேசியதில்லையே ஏன்? தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை சொல்வது போலக் கச்சத்தீவைத் தாரைவார்த்தது ராஜதந்திரம் என்று ஒப்புக்கொள்வாரா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்? இவ்வாறு அண்ணாமலை கேள்விகளை எழுப்பி உள்ளார்.
தமிழ்நாட்டின் பாரம்பரிய மீன்பிடி உரிமைப் பகுதிதான் கச்சத்தீவு. தமிழ்நாட்டின் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்த தீவுப் பகுதி. இங்கு தமிழ்நாட்டு மீனவர்கள்தான் அந்தோணியார் தேவாலயத்தை கட்டினர். 1974-ல் அரசியல் காரணங்களுக்காக தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல், தமிழ்நாட்டின் எதிர்ப்பை மீறி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்துக் கொடுத்தார். கச்சத்தீவை இந்திரா காந்தி தாரைவார்த்ததால்தான் தமிழ்நாட்டு மீனவர்களின் துயரம் தற்போது வரை தொடருகிறது. வெட்ஜ் பேங்க் தீவுகள் என்பது தமிழ்நாட்டின் கன்னியாகுமரிக்கு அருகே உள்ள மணல் திட்டு தீவு. இது இலங்கைக்கு சொந்தமானதாக இருந்தது. கடல்வாழ் உயிரினங்களின் சொர்க்கமாக இருக்கக் கூடியது. வங்க கடலும் அரபிக் கடலும் இந்திய பெருங்கடலும் இணையக் கூடிய மணல் திட்டு தீவு பகுதி. இதனால் இயற்கை வளம் அதிகம் உள்ள தீவு. இதனைத்தான் செல்வப்பெருந்தகை குறிப்பிட்டிருந்தார்.