திமுகவுடன் கருத்து வேறுபாடு இல்லை என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள் அனைவரும் பிரசாரம் செய்ய உள்ளோம். ஜனநாயக நாட்டில் தேர்தலில் போட்டி போடுவது என்பது அந்தந்த கட்சிகளின் முடிவு. அதில் கருத்து சொல்ல விரும்பவில்லை. தமிழக மக்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
இந்தியா கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த மண்ணை பாதுகாக்க கூடிய தலைவர்களாக ராகுல்காந்தியும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் உள்ளனர். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சியோடு திமுகவினருடன் இணைந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பணியாற்றி வருகிறார்கள்.
நடிகர் விஜய்யின் கட்சி கொள்கை, கோட்பாடு, சமூக நீதி பேசுவது என அனைத்தும் இந்தியா கூட்டணியுடன் ஒத்துபோவதால் அவரை இந்தியா கூட்டணிக்கு அழைத்தோம். வேறு எதுவும் இல்லை. விஞ்ஞானம் வேகமாக வளர்ந்து வருகிறது. இப்படிப்பட்ட காலத்தில் கோமியம் குடியுங்கள் என கூறுகின்றனர். அனைவரையும் முட்டாள் ஆக்குவதுதான் பாஜக அரசியல். இவ்வாறு அவர் கூறினார்.