“டங்ஸ்டன் சுரங்க நடவடிக்கைகளை மத்திய அரசு ரத்து செய்து போர்க்கால அடிப்படையில் அரசாணை வெளியிட்டுள்ளது” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று (ஜன.23) மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மதுரை மேலூர் தொகுதியில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் ஒப்பந்தத்துக்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முழுவதுமாக ரத்து செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் இந்த அரசாணை கொண்டு வரப்பட்டுள்ளது. டங்ஸ்ட்ன் சுரங்க விவகாரம் தொடர்பாக திமுகவை போல் நாங்கள் அரசியல் செய்யாமல், ஆக்கபூர்வமான கட்சியாக செயல்பட்டுள்ளோம். டங்ஸ்டன் சுரங்க நடவடிக்கை ரத்து என்பது ஜனநாயகத்தின் வெற்றியாகும். பிரதமர் தமிழகத்தின் மீதுள்ள அன்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இரும்பு 5,300 ஆண்டுகளுக்கு முன்னரே நமது புழக்கத்தில் இருந்துள்ளது என்ற வரலாற்றுச் சான்றை முதல்வர் ஸ்டாலின் வைத்துள்ளார். அதை வரவேற்கிறாம். ஒவ்வொரு தமிழனாக நாம் எல்லோரும் பெருமைப்பட்டுக் கொள்வோம். திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் ஸ்தலம். இன்று ஐ.யு.எம்.எல் கட்சியின் எம்.பி நவாஸ்கனி, திருப்பரங்குன்றம் சென்று மதப்பிரச்சினையை உருவாக்குகிறார். மலையில் வைத்து மாமிசம் சாப்பிட்டு உரிமையை காட்ட நினைக்கிறார். ஒரு எம்.பி. இதை செய்ய வேண்டாம். இதை வன்மையாக கண்டிக்கிறோம். ஆளும் கட்சியான திமுகவின் தூண்டுதலின் பேரில், ஐ.யு.எம்.எல் எம்.பி இதை செயல்படுத்துகிறார். இதற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். இவ்விவகாரம் தொடர்பாக திருப்பரங்குன்றத்தில் எழுச்சிகரமான நிகழ்வை பாஜக நடத்த உள்ளது.
காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு கச்சத்தீவை கொடுத்து இந்திய எல்லையை சுருக்கினர். இதனால் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. கச்சத்தீவு கொடுத்ததற்காக திமுக, காங்கிரஸ் கட்சியினர், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மக்களின் வீட்டுக்குச் சென்றும் மன்னிப்பு கேட்க வேண்டும். கச்சத்தீவு விவகாரத்தில் தமிழர்களின் உரிமையை நிலை நாட்ட பிரதமர் உறுதுணையாக இருப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இவ்விவகாரத்தில் காங்கிரஸ், திமுக சேர்ந்து செய்த தவறை பிரதமர் சரி செய்வார்.
நாங்கள் பெரியார் கொள்கையை ஏற்கவில்லை என்றாலும், அவரை அவமானப்படுத்தவில்லை. பெரியாரை மறந்து புதிய தலைமறையினர் வந்து கொண்டிருக்கின்றனர். நாங்கள் பெரியாரை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை. அவரைத் தாண்டி நாங்கள் சென்று விட்டோம். வளர்ச்சியை நோக்கி எங்கள் பாதை உள்ளது.
தேர்தல் நெருங்குவதால், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என முதல்வர் பொய் பேசத் தொடங்கி விட்டார். தேர்தல் வாக்குறுதி பற்றி பேச அருகதை இல்லாத கட்சி திமுக. தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றியது தொடர்பாக திமுக வெள்ளை அறிக்கை தர வேண்டும். கூட்டணி தொடர்பான கேள்விக்கு நயினார் நாகேந்திரன் கேஷூவலாக பதிலளித்துள்ளார். கூட்டணி என்பது தீவிரமான விஷயம். 2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் மலரும். கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. கருத்தை கருத்தால் எதிர்த்தால் ஜனநாயகத்துக்கு நல்லது. சென்னை பக்கம் விமான நிலையம் வர வேண்டும் என்பது கட்டாயம். இவ்வாறு அவர் கூறினார்.