தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்: தலைவர்கள் கண்டனம்!

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியில், தமிழக வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர் மீதான தாக்குதலுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

2024-2025 ஆண்டுக்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்களுக்கான கபடி போட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குருகாசி பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து 4 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த வீராங்கனைகள் இந்தத் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இன்று நடந்த காலிறுதிப் போட்டியில், தமிழகத்தின் அன்னை தெரசா பல்கலைக்கழகத்துக்கும், பிகார் மாநிலம் தர்பாங்கா பல்கலைக்கழகத்துக்கும் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது எதிரணி வீராங்கனைகள் ஃபவுல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால், தமிழக வீராங்கனைகள் நடுவரிடம் முறையிட்டுள்ளனர். ஆனால், நடுவர் தமிழக வீராங்கனைகளையும், பயிற்சியாளரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு கைக்கலப்பு ஏற்பட்டு, பயிற்சியாளரை காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து அந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்துக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

டி.ஜெயக்குமார் (அதிமுக):- “கோப்பையை வாங்கி வந்த பிறகு கோடிகளை கொடுப்பதை விட,விளையாடும் வீரர்களுக்கு அளிக்கும் பாதுக்காப்பு கோடிகளை விட பெரியது. பிகார் மாநில வீரர்கள் – பஞ்சாப் மாநில பார்வையாளர்கள் என இருவரும் இணைந்து தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியின் சாதனைகளில் ஒன்றாக எடுத்துக் கொள்ள போகிறாரா? அடுத்த மாநிலத்துக்கு செல்லும் வீரர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய மறுத்துவிட்டதா விளையாட்டுத் துறை?” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் (பாமக தலைவர்):- “பிகாரின் தர்பங்கா பல்கலைக்கழக அணியுடன் இன்று நடைபெற்ற போட்டியின் போது, பிகாரின் வீராங்கனைகளின் விதிமீறல்கள் குறித்து புகார் செய்ததால், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது தெரியவருகிறது. பஞ்சாப் மாநில அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தமிழக வீராங்கனைகளின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதேபோல், தமிழக பயிற்சியாளர் மீதான வழக்கை திரும்பப் பெறச் செய்வதுடன், பிகாரின் அணியினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

டிடிவி தினகரன் (அமமுக):- “உரிய விதிமுறைகளை பின்பற்றி கபடி போட்டியை நடத்த வேண்டிய நடுவர்களே விதிமீறல்களில் ஈடுபட்டிருப்பதோடு, அதனை சுட்டிக்காட்டிய தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. எனவே, பஞ்சாப் மாநில அரசை தொடர்பு கொண்டு தமிழக கபடி வீராங்கனைகளை தாக்கிய நடுவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதோடு, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பயிற்சியாளரையும், வீராங்கனைகளையும் பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

ஜி.கே.வாசன் (தமாகா):- “பஞ்சாப்பில் விளையாட்டின் போது உரிய விதிமுறைகள் கடைபிடிக்கப்படாதது முறையல்ல. எனவே தற்போது பஞ்சாப்பில் தாக்கப்பட்ட தமிழக வீராங்கனைகளுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும். இதற்காக மத்திய மாநில அரசுகள் பிற மாநிலங்களில் சென்று விளையாடும் வீரர் வீராங்கனைகளுக்கு உரிய பாதுகாப்பு இருக்க வேண்டும் என்பதற்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

நாம் தமிழர் சீமான் கூறியுள்ளதாவது:-

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற இந்திய அளவிலான கபடி போட்டியில் புள்ளிகள் முறையாக வழங்கப்படவில்லை என நடுவர்களிடம் முறையிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீராங்கனைகளைப் போட்டி நடுவரே கடுமையாகத் தாக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியும், மிகுந்த சீற்றத்தையும் ஏற்படுத்துகிறது. கபடி விதிகளைக் கூறி நியாயம் கேட்ட தமிழ்நாட்டுப் பிள்ளைகள் மீது கொடுந்தாக்குதல் நடத்தியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

ஏற்கனவே, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற இந்திய அளவிலான கபடி போட்டியில் புள்ளிகள் முறையாக வழங்கப்படவில்லை என நடுவர்களிடம் முறையிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீரர்கள் மீது வடநாட்டு வீரர்கள் கடுமையாகத் தாக்குதல் நடத்தியதோடு, தமிழ்நாட்டிற்குத் திரும்பிச்செல்லுங்கள் என்றுகூறி அவமதித்திருந்தனர். அதனை அப்போதே நான் கடுமையாகக் கண்டித்ததோடு, தமிழ்நாடு அரசு அது குறித்து உரிய விசாரணை நடத்தி, தாக்குதல் தொடுத்தவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தேன். தமிழ்நாட்டு கபடி வீரர்கள் மீதான அத்தாக்குதலை திமுக அரசு அலட்சியம் செய்ததன் விளைவே தற்போது மீண்டும் ஒரு தாக்குதல் நம் பிள்ளைகள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளது.

விளையாட்டில் கூட உரிமையைக் கேட்க முடியாதபடி தமிழ்நாட்டுப் பிள்ளைகள் அடித்து விரட்டப்படுவார்கள் எனில் எங்கே இருக்கிறது ஒருமைப்பாடு? எப்படி வரும் நாட்டுப்பற்று? இந்திய ஒற்றுமை, தேசபக்தி பன்முகத்தன்மை, இறையாண்மை என்றெல்லாம் பாடமெடுப்பவர்கள் இப்போது வாய் திறப்பார்களா?

தமிழ்நாட்டு கபடி வீராங்கனைகள் மீது நடத்தப்பட்ட கொடுந்தாக்குதலுக்கு தமிழ்நாடு அரசு, இப்போதாவது தமது கடும் கண்டனத்தைப் பதிவு செய்வதுடன், உரிய விசாரணை நடத்தித் தாக்குதல் நடத்தியவர் மீது சட்டப்படி தண்டனை பெற்றுத்தர விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளதாவது:-

பஞ்சாபில் தமிழக கபடி விளையாட்டு வீராங்கனைகள் தாக்கப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது.. அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் தமிழக அரசு உடனே செய்ய வேண்டும். காயமடைந்த வீராங்கனைகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.. பிரச்சனைகள் என்ன என்று கண்டறிந்து அவர்கள் சென்றிருக்கும் பணி சிறப்பாக அமைய பக்கபலமாக இருந்து அவர்கள் பத்திரமாக திரும்புவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் “பஞ்சாப்பில் தமிழக வீராங்கனைகள் அனைவருமே பாதுகாப்பாக உள்ளனர். எனவே, யாரும் அச்சப்பட வேண்டாம். வதந்திகளைப் பரப்ப வேண்டாம். இனிமேல், வெளி மாநிலங்களுக்கு விளையாடச் செல்லும் தமிழக வீராங்கனைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும்,” என்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் இன்று (ஜன.24) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கபடி போட்டி, பஞ்சாப்பில் உள்ள பதின்டா மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இருந்து அன்னை தெரசா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தில் இருந்து 36 வீராங்கனைகள் சென்றுள்ளனர். அவர்களுடன் 3 மேலாளர்கள் மற்றும் 3 பயிற்றுநர்கள் சென்றுள்ளனர். இன்று அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் பிகார் மாநிலம் தர்பாங்கா பல்கலைக்கழகத்துக்கும் இடையிலான கபடி போட்டியின்போது, தமிழக வீராங்கனை மீது தாக்குதல் நடந்ததாக புகார் வந்தது. உடனடியாக தொலைபேசியில் அழைத்து பேசினோம்.

இந்தப் பிரச்சினையின் பேரில் பயிற்றுநர் பாண்டியராஜன் என்பவரை காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும், இவ்விவகாரம் குறித்து தெரியவந்ததும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு தமிழக வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

போட்டி நடைபெறும்போது புள்ளிகள் தொடர்பாக ஏற்பட்ட மனக்கசப்பால் இரு அணிகளுக்கும் இடையே ஒரு வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் ஒரு பதற்றமான சூழல் நிலவியிருக்கிறது. அதுதான் தொலைக்காட்சியிலும், சமூக ஊடகங்களிலும் வீடியோவாக வந்திருக்கிறது. அம்மாநில மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து உடனடியாக இந்தப் பிரச்சினையை சரிசெய்திருக்கிறோம். மேலும் இன்றே நமது வீராங்கனைகள் அனைவரையும் பதின்டாவில் இருந்து டெல்லி அழைத்துச் செல்லவும், பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டனர்.

அதேபோல், கைது செய்யப்பட்டிருந்த பயிற்றுநர் பாண்டியராஜனையும் காவல் துறையினர் விடுவித்துவிட்டனர். இன்று நள்ளிரவு டெல்லி செல்லும் தமிழக அணியினர் டெல்லி இல்லத்தில் தங்கவைக்கவும், உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்ய முதல்வரின் உத்தரவின்பேரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீராங்கனைகள் உடன் சென்றுள்ள உடற்கல்வி இயக்குநர் கலையரசி என்பவரோடு நான் தொலைபேசியில் பேசிவிட்டேன். எந்தவிதமான பதற்றமும் இல்லை. வீராங்கனைகள் அனைவருமே பாதுகாப்பாக உள்ளனர். எனவே, யாரும் அச்சப்பட வேண்டாம். வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

போட்டியின் போது புள்ளிகள் பெறுவதில் இரு அணிகளுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, சின்ன தள்ளுமுள்ளு நடந்துள்ளது. யாருக்கு பெரிய அடி எதுவும் இல்லை. சின்ன சின்ன சிராய்ப்புகள் தான் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு எல்லாம் யாரையும் அழைத்துச் செல்லவில்லை. காயங்கள் எல்லாம் முதலுதவிப் பெட்டிகளில் உள்ள பொருட்களைக் கொண்டே சரிசெய்யப்பட்டுள்ளது. அனைத்து வீராங்கனைகளும் பாதுகாப்பாக உள்ளனர்.

தற்போது சென்றுள்ள வீராங்கனைகள் உடன் உடற்கல்வி இயக்குநர்கள், பயிற்றுநர்கள் உடன் சென்றுள்ளனர். எப்போதாவது இதுபோல ஒன்றிரண்டு சம்பவங்கள் நடக்கிறது. ஏற்கெனவே உரிய பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இனிமேல் வெளி மாநிலங்களுக்கு விளையாடச் செல்லும்போது கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படு. இவ்வாறு உதயநிதி கூறினார்.