டங்ஸ்டன் பிரச்னையில் திமுக ‘நாடகம்’ நடத்துகிறது: எல்.முருகன்!

டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எந்தவித எதிர்ப்பையும் பதிவு செய்யாத திமுக அரசு, மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்திய பிறகுதான் எதிர்த்தது எனவும் டங்ஸ்டன் பிரச்னையில் திமுக ‘நாடகம்’ நடத்துகிறது என மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் குற்றம்சாட்டினார்.

புதுச்சேரியில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:-

மதுரை டங்ஸ்டன் சுரங்கம் அமைய அந்த பகுதி கிராம மக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை தலைமையில் அந்த பகுதியை சோ்ந்த விவசாயிகள் தில்லி சென்று, மத்திய கனிம வளத்துறை அமைச்சர் கிஷன்ரெட்டியை சந்தித்து பேசினார். அப்போது டங்ஸ்டன் சுரங்கத்தால் அந்த பகுதியில் ஏற்படக்கூடிய விவசாய பாதிப்பு மற்றும் இதர பிற பாதிப்புகளை எடுத்துக் கூறினர்.

இதையடுத்து பிரதமா் மோடியுடன் ஆலோசித்து மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஏலத்தை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டார். அதற்காக மதுரை மேலூா் பகுதி மக்கள் சாா்பிலும், தமிழக மக்கள் சாா்பிலும் பிரதமா் மோடிக்கும், மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் சுரங்கம் அமைப்பதற்கான நடைமுறை பணிகள் நடைபெற்று வருகிறது. 2023-ஆம் ஆண்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால், கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தது முதல் இந்த திட்டத்துக்கான எந்தவிதமான எதிா்ப்பை திமுக அரசு பதிவு செய்யவில்லை. மேலும் மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்திய பிறகுதான் எதிர்த்தது எனவும் டங்ஸ்டன் பிரச்னையில் திமுக ‘நாடகம்’ நடத்துகிறது.

டங்ஸ்டன் உள்ளிட்ட எந்தப் பிரச்னையாக இருந்தாலும் மக்கள் பக்கமே மத்திய அரசு நிற்கும். விரைவில் புதுதில்லியில் உலக திருக்குறள் மாநாடு நடைபெறுவதற்கான தேதி அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.