குடியரசு நாளன்று ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு நாளன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இந்நிலையில் குடியரசு நாளையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்துக்கு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ள நிலையில் தவெக சார்பில் விஜய் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் திமுக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. கட்சி மாநாட்டில் பேசிய விஜய், திமுகவுக்கும் பாஜகவுக்கும் எதிராகப் பேசினார். இந்த சூழ்நிலையில் அவர் ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்துகொள்வாரா இல்லை புறக்கணிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த டிச. 30 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என். ரவியை முதல்முறையாக நேரில் சந்தித்த தவெக தலைவர் விஜய், ‘தமிழகம் முழுவதும் பெண்களின் பாதுகாப்பு, ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கான நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளுநரிடம் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.