“இனிமேல் பெரியார் பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. பெரியாரை தூற்றுவோரை எல்லாம் நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள். அதற்கு இனிமேல் நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்வீர்கள்” என்று மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாற்றுக்கட்சி இளைஞர்கள் திமுகவில் இணையும் விழா இன்று (ஜன.24) நடைபெற்றது. இதில் நாதக நிர்வாகிகள் 51 பேர் உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்வில் திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த 3000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர். இன்னும் 13-14 மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வரப்போகிறது. பொதுவாக தேர்தல் வரும் நேரங்களில் ஆளுங்கட்சியை எதிர்த்து எதிரணிகள் தான் ஒன்று சேர்வார்கள். அதுதான் வழக்கம். ஆனால், வித்தியாசமாக எதிர்க்கட்சியில் இருந்த நீங்கள், உங்கள் அனைவரையும் ஆளுங்கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளீர்கள். இதன்மூலம் வரும் சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவு என்ன என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.
இன்று கட்சியில் இணைந்துள்ள நீங்கள், வெறும் சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவை மட்டும் கருத்தில் கொண்டு திமுகவில் இணையவில்லை, கட்சியின் கொள்கை மற்றும் லட்சியங்களையும், தமிழக முதல்வரின் தலைமையையும் ஏற்று இணைந்துள்ளீர்கள். இதுபோல நீங்கள் திமுகவில் இணையும்போது, கண்டிப்பாக எதிர்க்கட்சிகளுக்கு வயிற்றெரிச்சல் வரத்தான் செய்யும். அதற்காகவே, என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்துக்கு மத்திய அரசு சார்பில் ஒருவரை அனுப்பி வைத்துள்ளனர். அவர்தான் தமிழக ஆளுநர். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல, நியமிக்கப்பட்ட ஒருவர். அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? தமிழகத்தின் அடையாளங்களை ஒவ்வொன்றாக அழிக்கின்ற முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவது, தமிழ்த்தாய் வாழ்த்தை கொச்சைப்படுத்துவது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடக்கூடாது என்று சட்டப்பேரவையிலேயே கூறுவது, சட்டப்பேரவையை புறக்கணித்துச் செல்வது, இதுதான் ஆளுநரின் வேலை.
இதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சித் தலைவருக்கு உண்டு. ஆனால், அவ்வாறு செய்வதில்லை. டங்ஸ்டன் சுரங்க ஏலம் தொடர்பான விவகாரம் வந்தபோது, சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து முதல்வர் மக்களை நேரடியாக சென்று சந்திக்குமாறு கூறினார். மேலும் சட்டசபையில், திமுக ஆட்சி இருக்கும்வரை மதுரையில் டங்ஸ்டன் திட்டம் நிறைவேற்றப்படாது என்று கூறினார். அதை செய்தும் காட்டி மக்களோடு நின்று மக்களுக்கான ஆட்சியை கொடுத்து கொண்டிருக்கிறார். மக்களுக்கான பல்வேறு திட்டங்களை முதல்வர் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.
இனிமேல் பெரியார் பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. பெரியாரை தூற்றுவோரை எல்லாம் நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள். அதற்கு இனிமேல் நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்வீர்கள், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்வோம் என்று இலக்கு நிர்ணயித்துள்ளார். இன்று கட்சியில் இணைந்துள்ளவர்களின் எழுச்சியைக் காணும் போது 200 அல்ல 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெல்லும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.