தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிர்வாக வசதிக்காக 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, முதல்கட்டமாக 19 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நியமன ஆணையுடன், வெள்ளி நாணயம் வழங்கி விஜய் வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில், நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து வந்த 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது, கட்சியின் முதலாம் ஆண்டு விழா கொண்டாட்டங்கள் நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
தவெக நிர்வாகிகளை நியமிக்க பணம் பெறப்படுவதாக எழுந்த புகார் எழுந்துள்ள நிலையில், கட்சி நிர்வாகிகளை தனித்தனியாக விஜய் சந்தித்துப் பேசினார். இதையடுத்து, மாவட்டச் செயலாளர்கள் நியமன பட்டியலை விஜய் வெளியிட்டார். அதன்படி, தவெகவின் நிர்வாக வசதியைக் கருத்தில்கொண்டும், கட்சிப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளும் வகையிலும், சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, மூன்று அல்லது இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் முதல்கட்டமாக 19 மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை வெளியிட்டு, அவர்களுக்கு நியமன கடிதத்துடன், வெள்ளி நாணயத்தையும் வழங்கி விஜய் வாழ்த்து தெரிவித்தார்.
அதேபோல், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மாவட்ட இணை செயலாளர், பொருளாளர், 2 துணைச் செயலாளர்கள், 10 செயற்குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. துணை செயலாளர்கள் பதவியைப் பொருத்தவரை ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் கட்சியில் சமவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்களுடன் நடிகர் விஜய் ஆலோசனை மேற்கொண்டு, பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். இன்னும் ஓரிரு நாட்களுக்குள் மீதமுள்ள மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் பட்டியல் அடுத்தடுத்து வெளியாகும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.