நீட் கொண்டு வந்தது காங்கிரஸ். அதற்கு திமுக கூடவே இருந்தது: சீமான்!

“ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்க்கும்போது, ஒரே கார்டு ஒரே ரேஷன் ஒரே வரியை ஏன் எதிர்க்கவில்லை?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஆதரவாக 2-ம் நாளாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஈரோடு காளை மாட்டு சிலை, மரப்பாலம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ் தேசிய மக்கள் பல நெடுங்காலமாக வாழ்விடத்தை இழந்த நிலையில் அடிமையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். தமிழக மக்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் இல்லை. நிலக்கரி, மீத்தேன், அணுஉலை, மின்சாரம் போன்ற அனைத்தும் பிரித்து கொடுக்கப்படுகிறது. ஆனால் காவிரி நதிநீர் உரிமையில் ஒரு சொட்டு நீர் பெற முடியவில்லை. இதற்காக போராடும் தமிழர்கள் கர்நாடகாவில் தாக்கப்படுகிறார்கள். ஆனால் அதை தடுக்க ஆள் இல்லை. எல்லா உரிமைகளையும் பறிகொடுத்து விட்டு மருத்துவத்தை கனவாக கொண்டு உள்ள தம்பி, தங்கை கனவுகள் நனவாகமால் போனதற்கு நீட் கொண்டு வந்தது காங்கிரஸ். அதற்கு திமுக கூடவே இருந்தது. நீட் ரகசிய திட்டம் உள்ளது என்று சொல்லி ஆட்சிக்கு திமுக வந்தார்கள் .

இப்படி எல்லாம் வெற்று அறிக்கையை கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்தது. நீண்ட காலமாக தமிழக மக்கள் மத்தியில் வாக்கு பெற்று ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். கல்வி மாநில உரிமையை மத்திய அரசு எடுத்து கொள்ளும்போது மாநில அரசு அமைதியாக இருந்து விட்டது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவோம் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மதுக்கடைகளை மூடுவோம் என்று சொன்னார்கள். வந்த பிறகு வாயை மூடி விட்டார்கள்.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ எதிர்க்கும்போது, ‘ஒரே கார்டு ஒரே ரேஷன் ஒரே வரியை’ ஏன் எதிர்க்கவில்லை. இந்த இடத்தில் மாநில உரிமைகளை இவர்கள் பாதுகாக்கவில்லை. தமிழகத்தில் எந்தவொரு அடிப்படை கட்டமைப்புயும் திமுக செய்யவில்லை. தண்ணீர் சேகரிக்க ஏரி குட்டை எதையும் இவர்கள் உருவாக்கவில்லை. அப்படியிருக்கும்போது, இவர்கள் சாதித்ததாக எதை சொல்வார்கள்.

ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தவிர என்ன செய்தார்கள்? எதுவுமில்லை. பேரிடரின் போது உரிய இழப்பீடு கூட பெறமுடியாமல் மாநில உரிமைகள் பற்றி பேசுவது எந்த விதத்தில் நியாயம். ஒவ்வொரு தேர்தலின் போதும் கச்சத்தீவு மீட்பு தேர்தல் வாக்குறுதியில் மட்டுமே உள்ளது. இன்று வரை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு இல்லை. மீனவர்கள் வலை அறுப்பு, தாக்குதல், படகுகள் பறிமுதல் போன்றவை நடக்கின்றது. ஆனால் கேரள மாநில மீனவர்கள் எல்லை தாண்டும் போது இதுபோன்ற செயல்கள் நடப்பது இல்லை.

நாம் தமிழர் கட்சி வீதி வீதியாக வந்து வாக்கு கேட்கிறோம். ஆனால் திமுக வந்து கேட்கவில்லை.உங்கள் மீது நம்பிக்கை வைத்து தான் தொடர்ந்து தேர்தலில் நாம் தமிழர் கட்சி நிற்கிறது. ஒவ்வொருவரும் மாற்றத்தை விரும்பினால் கண்டிப்பாக மாற்றம் நிச்சயமாக உருவாகும். இவ்வாறு அவர் பேசினார்.