பெரியாரை சொச்சைப்படுத்தி பேசுவது நாகரீகமல்ல: அமைச்சர் துரைமுருகன்!

பெரியாரை நன்றி கெட்டத் தனமாக கொச்சைப்படுத்துவது நாகரீகம் அல்ல என நாம் தமிழர் கட்சியின் தலைவமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தொடர்ந்து பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். பெரியார் குறித்த சீமானின் கருத்துக்கு பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இருப்பினும் சீமான் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். பெரியார் தமிழர்களையும் தமிழ் மொழியையும் அவதூராக பேசியதாகவும் பெண்ணுரிமை குறித்து பேசிய பெரியார் பெண்களை தாலியை அறுத்தெறிய வேண்டும் என்றும் குழந்தை பெற்றுக் கொள்ளக்கூடாது என்று பேசியதாகவும் கூறி வருகிறார். மேலும் பெரியாரை போற்றும் திராவிட கட்சிகள் பெரியார் கூறியதை மக்களிடம் எடுத்து சொல்லி ஓட்டு கேட்க முடியுமா என்றும் சவால் விட்டு வருகிறார் சீமான். சீமானின் கருத்துக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சீமான் பெரியார் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த துரைமுருகன், பெரியார் இல்லாவிட்டால் நான் அமைச்சர் இல்லை, பெரியார் இல்லாவிட்டால் தம்மை போன்றோர் அமைச்சராகியிருக்க முடியாது என்றார்.

மேலும் பெரியார் என்று ஒருத்தர் பிறந்திருக்காவிட்டால் நான் அமைச்சராக அமர்ந்து பேட்டி கொடுத்திருக்க முடியாது என்று கூறிய துரைமுருகன், சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் முன்பு எப்படி இருந்தார்கள் தற்போது எப்படி மாறி உள்ளார்கள் என தெரிந்தும், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என பேசும் இப்படிப்பட்ட அறிவு ஜீவிகள் இந்த காலத்திலும் உள்ளார்கள் என்றும் விமர்சித்தார்.

மேலும் அடிமைப்படுத்தியவர்களிடம் இருந்து நானும் மனிதன்தான் என மீட்டவர் பெரியார். பெரியாரை நன்றிக் கெட்டத்தனமாக கொச்சைப்படுத்துவது நாகரீகம் அல்ல எனவும் அமைச்சர் துரைமுருகன் சீமானுக்கு பதிலடி கொடுத்தார்.