ஜகபர் அலி கொலை வழக்கில் மெத்தனமாக செயல்பட்டதாக காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்!

கனிம வள கொள்ளைக்கு எதிராகப் போராடிய ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கில் மெத்தனமாக செயல்பட்ட திருமயம் காவல் நிலைய ஆய்வாளர் குணசேகரனை, பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியைச் சேர்ந்தவர் ஜகபர் அலி. முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலரான இவர் சமூக ஆர்வலரும் கூட. இவர், திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கனிம வள கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதாரங்களுடன் பல முறை மனு கொடுத்து வந்துள்ளார். இதன் காரணமாக கனிம வள கொள்ளையர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வந்தார். எனினும், தொடர்ந்து இதுபோன்று கனிம வள கொள்ளைக்கு எதிராக மனுக்களை கொடுத்து வந்துள்ளார். பெயருக்கு ஒரு அரசு அனுமதியை வாங்கிக் கொண்டு ஒதுக்கப்பட்ட அளவை விட பல மடங்கு கனிமங்கள் வெட்டி அள்ளப்பட்டு, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி வருவது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஜனவரி 10 ஆம் தேதி ஜகபர் அலி புதுக்கோட்டை கோட்டாட்சியரிடம் கனிம வள கொள்ளை தொடர்பாக மனு அளித்துள்ளார். சில குவாரிகளின் பெயர்களுடன் பல ஆதாரங்களையும் இணைத்து பல நூறு கோடிக்கான கனிம வள கொள்ளை நடந்துள்ளதாகவும், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அண்மையில், ஜகபர் அலி, பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற டிப்பர் லாரி மோதியதில் ஜெகபர் அலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து திருமயம் போலீசார் விசாரணை நடத்தினர்.

கனிம வள கொள்ளைக்கு எதிராக தொடர்ந்து போராடிய சமூக ஆர்வலர் ஜகபர் அலி, கடைசியாக 10 ஆம் தேதி புதுக்கோட்டை கோட்டாட்சியரிடம் பல ஆதாரங்கள், ஆவணங்களுடன் மனு கொடுத்த அடுத்த 7 நாட்களில் டிப்பர் லாரி மோதி உயிரிழந்தது சந்தேகத்தை எழுப்புவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். ஜகபர் அலி மரண விவகாரத்தை விசாரிக்க, இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. தமிழ்நாட்டில் கனிம வளக் கொள்ளையை எதிர்த்த நேர்மையான அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். எனவே, ஜகபர் அலியும் திட்டமிட்டு கல்குவாரி அதிபர்களால் கொல்லப்பட்டிருக்கலாம், இதில் அரசு அதிகாரிகள் பலரும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் பலரும் சந்தேகம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜகபர் அலி விபத்தில் இறந்த விவகாரத்தில் ஜேசிபி மற்றும் லாரி உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கல் குவாரி சம்பந்தப்பட்ட நபர்கள் ஜகபர் அலியை திட்டமிட்டு கொலை செய்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. உயிரிழந்த ஜகபர் அலியின் மனைவி மரியம் கொடுத்த புகாரின் அடிப்படையில், கொலை வழக்குப் பதிவு செய்து இதில் தொடர்புடைய குவாரி உரிமையாளர் ராசு அவரது மகன் தினேஷ்குமார், லாரி உரிமையாளர் முருகானந்தம், விபத்தை ஏற்படுத்தி கொலை செய்வதற்காக அழைத்து வரப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் காசிநாதன் ஆகிய நான்கு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் பெற்று புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்தனர். அதோடு, இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த குவாரி உரிமையாளர்களில் ஒருவரான ராமையா சில நாட்களுக்கு முன்பு நமணசமுத்திரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஜகபர் அலி கொலை வழக்கில் நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை பெற்று தர வேண்டும் என தொடர் கோரிக்கை எழுந்து வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீசார் வசம் மாற்றி நேற்று உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், கனிம வள கொள்ளைக்கு எதிராக அளித்த புகாரின் பேரில் கொலை செய்யப்பட்ட ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கில் மெத்தனமாக செயல்பட்டதாக, திருமயம் காவல் நிலைய ஆய்வாளர் குணசேகரனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக ஐ.ஜி வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.