இது சேர சோழ பாண்டியர் மண்.. பெரியார் மண் அல்ல.. எங்களுக்கு பெரியாரே மண்தான்: சீமான்!

தமிழ்நாட்டை பெரியார் மண் என்று அழைத்தால் கொலை வெறி வந்துவிடும்; இது என் மண்.. தமிழ் மண்..எங்களுக்கு பெரியார் ஒரு மண்ணுதான் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீண்டும் தந்தை பெரியாரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:-

தந்தை பெரியாரைப் பார்த்துதான் பிரபாகரன் விடுதலைப் போராட்டம் நடத்தியதாக சொல்கின்றனர். இதனைவிட பிரபாகரனையும் இந்த இனத்தையும் அவமானப்படுத்த முடியாது. பெரியார் முறையில்தானே பிரபாகரன் திருமணம் செய்திருக்க வேண்டும்.. ஆனால் திருப்போரூர் முருகன் கோவிலில்தானே பிரபாகரன் திருமணம் செய்தார். பெரியாரைப் பார்த்துதான் பிரபாகரன் படையை கட்டினாரா? அல்லது சுபாஷ் சந்திர போஸைப் பார்த்து பிரபாகரன் படையை கட்டினாரா? எங்களது முன்னோர்களின் வீரம், பிரபாகரனை போராடத் தூண்டியதா? பெரியாரின் கோட்பாடு பிரபாகரனை போராடத் தூண்டியதா?

ஈழ விடுதலைக்கு எதிரானவர் பெரியார் நானே ஒரு அடிமை.. இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்? என்று ஈழத் தந்தை செல்வாவிடம் சொன்னவர்தான் பெரியார். அந்த பெரியார்தான் பிரபாகரனுக்கு முன்னுதாரணமா? பெரியார் கருத்துகள்தான் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கவும், பிரபாகரனின் ராணுவத்தில் பெண்களை சேர்க்கவும் காரணம் எனில் பெரியார் வழியில் அதிகாரத்துக்கு வந்த அண்ணாவும் கருணாநிதியும் ஏன் பெண்களுக்கு உரிமை கொடுக்கவில்லை? என்ற கேள்விக்கு பதில் இருக்கிறதா? பெரியாருக்கும் பிரபாகரனுக்கும் என்ன தொடர்பு?

வேலுநாச்சியாரைப் பார்த்துதான் பிரபாகரன் தமது ராணுவத்தில் பெண்களை சேர்த்தார். ஆங்கிலேயர் வெடி மருந்து கிடங்கை மோதி அழித்த தமிழர் வரலாற்றைப் பார்த்து ஏன் கரும்புலி படையை பிரபாகரன் உருவாக்கி இருக்கக் கூடாது? இந்த பெருமையை எல்லாம் பெரியாருக்கு கொண்டு போய் கொடுக்கிறீர்களே.. பெரியாருக்கும் பிரபாகரன் விடுதலைப் போராட்டத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? இதை எல்லாம் பிரபாகரன் போராட்டம் நடத்திய போது ஏன் புத்தகமாக குறிப்பிடவில்லை?

பிரபாகரன் ஒரு தீவிரவாதி.. பயங்கரவாதி.. தனித் தமிழீழம் தீர்வு அல்ல.. ஒருங்கிணைந்த இலங்கைக்குள் அரசியல் தீர்வு காண வேண்டும் என்று சொல்கிற கட்சிதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இலங்கையில் தமிழினத்தை அழித்தது காங்கிரஸ்; துணை நின்றது திமுக. அப்போது ஆதரித்தது கம்யூனிஸ்ட் கட்சி. உலகத் தமிழினம் நெடுமாறனைத்தான் மன்னிக்காது; பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்.. இப்போதுதான் பேசினேன்.. மகள் துவாரகா வந்து கொண்டிருக்கிறார் என்று சொன்ன நெடுமாறனை உலகத் தமிழ் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். எனக்கு எந்த பதற்றமும் இல்லை.. எல்லோரும்தான் என்னை பார்த்து பதறுகின்றனர்.

ஏய்.. திராவிடா உனக்கு ஒரு தலைவர் பெரியார் மட்டும்தான். ஆனால் தமிழர்கள் எங்களுக்கு எத்தனையோ தலைவர்கள் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் முதல் இந்தி எதிர்ப்பு போரை நடத்தியது பெரியார் என பேசுகிற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் வரலாற்றை தலையில் அடித்துக் கொண்டு சிரித்து கொண்டுதான் போக வேண்டும். தமிழ்நாட்டில் முதன் முதலாக இந்தி பள்ளியை திறந்தவரே உங்க பெரியார்தான். இந்தி எதிர்ப்பு போரில் தமிழர்கள் தீக்குளித்த போது கொலைகாரர்களாக பார்த்தவர் பெரியார்தான். கடன் தொல்லையால் கீழப்பழூர் சின்னசாமி தற்கொலை செய்ததாக இழிவுபடுத்தியது பெரியார்தான். இந்திக்கு எதிராக போராடுகிற கருங்காலிகளை பெட்ரோல், டீசல் கொண்டு அழிங்க என்று சொன்னவர்தான் பெரியார்.

திரும்ப திரும்ப சொல்கிறேன்.. இதனை பெரியார் மண்.. பெரியார் மண் என்று சொன்னால் கொலை வெறியாகிவிடும். இது சேர சோழ பாண்டியர் மண்.. பூலித்தேவர் மண்.. வேலுநாச்சியார் மண்.. முத்துராமலிங்க தேவர் என்கிற பெருமகனாரின் மண். இது என் மண்.. தமிழ் மண்.. பெரியார் மண் அல்ல.. எங்களுக்கு பெரியாரே மண்தான். இவ்வாறு சீமான் கூறினார்.