வேங்கைவயல் விவகாரத்தில் காவல்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டோம் என விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.
சென்னை மூலக்கொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபின் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சனாதன எதிர்ப்பில் அம்பேத்கரோடு பெரியார் கைகோத்து நின்றார். அம்பேத்கரையும் பெரியாரையும் எதிர் எதிர் துருவங்களில் நிறுத்துவது வேடிக்கையாக இருக்கிறது. அவர்களை பின்பற்றுவோர் இடையே வேறுபாடு ஏற்படுத்தும் முயற்சி எடுபடாது. பெரியாருக்கு எதிரான விமர்சனத்தை அம்பேத்கருக்கு எதிரான விமர்சனமாகவே பார்க்கிறோம். நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் போக்கு தமிழக மக்களின் நலனுக்கு நேரெதிராக இருப்பது கவலையளிக்கிறது. அவரை பின்பற்றுவோர் இவ்விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீதே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள சிபிசிஐடியின் விசாரணை ஏமாற்றமளிக்கிறது. அங்கு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதனை வாக்கு அரசியல் அடிப்படையில் அவர்கள் கையாள்வதாக தெரியவில்லை. தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இழந்ததால் வேறு நம்பிக்கையின்றி சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்கிறோம்.
அதிகாரிகள் மத்தியில் பட்டியலினத்தவர்களுக்கு எதிரான மனநிலை இருக்கிறது. தவெக தலைவர் விஜய் வேங்கைவயல் செல்வதாக சொன்னதை வரவேற்றேன். ஆனால் தற்போதைய நிலை குறித்து அவர் எதுவும் கருத்து சொன்னதாக தெரியவில்லை. சிபிசிஐடியின் குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது என சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவிருக்கிறோம். இதில் தொடர்புடையதாகக் கூறப்பட்டிருப்போரை கைது செய்தால் மிகப்பெரிய எதிர்ப்பை சந்திக்க நேரிடும். சமூகநீதி பக்கம் திமுக அரசு நிற்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதை முதல்வரின் கவனத்துக்கு மீண்டும் எடுத்துச் செல்வோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.