மக்கள் சக்தி மூலம் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை தடுத்து நிறுத்தி உள்ளோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை நிறுத்த வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் போராடி வந்தனர். அதுகுறித்து சட்டசபையிலும் தமிழக அரசு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு சமீபத்தில் முழுவதுமாக ரத்து செய்தது.
இதனையடுத்து டங்ஸ்டன் போராட்டக் குழுவினர் நேற்று முன்தினம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர். மேலும் அரிட்டாப்பட்டியில் நடைபெறவுள்ள நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு அழைப்பு விடுத்தனர். மக்களின் அழைப்பை ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அரிட்டாப்பட்டிக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் வல்லாளப்பட்டியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
கிராம மக்களின் அன்பு கட்டளையை ஏற்றுக்கொண்டு இங்கு வந்துள்ளேன். நான் வேறு, நீங்கள் வேறு அல்ல; உங்கள் மகிழ்ச்சியில் பங்கேற்க நான் இங்கு வந்துள்ளேன். உங்களுக்காக நடைபெறும் பாராட்டு விழா என்றுதான் இதை கருதுகிறேன். மக்களுக்கு விரோதமான செயல்களை மத்திய பா.ஜ.க. அரசு செய்து வருகிறது.
நான் மக்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன். நமக்கு வெற்றி கிடைத்திருக்கிறது என்பதுதான் உண்மை. அரிட்டாப்பட்டி மக்களுக்கு என்றும் துணை நிற்போம். டங்ஸ்டன் சுரங்க ஏலத்திற்கு எதிராக போராடி மூன்று மாதத்தில் வெற்றி கிடைத்துள்ளது. இது சாதாரண வெற்றி அல்ல. மாபெரும் வெற்றி. மக்கள் சக்தி மூலம் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை தடுத்து நிறுத்தி உள்ளோம். மக்கள் போராட்டத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசு பணிந்துள்ளது. பதவியை பற்றி எனக்கு கவலை இல்லை; மக்களை பற்றிதான் எனக்கு கவலை. டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை. இது மக்கள் பிரச்சினை என்பதில் தெளிவாக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.