இந்தியாவில் சனாதன சட்டமே இயங்கி வருகிறது: திருமாவளவன்!

இந்தியாவில் சனாதன சட்டமே இயங்குவதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர்கள் பேரவை சார்பில் சென்னையில் நேற்று ‘இந்திய குடியரசும் டாக்டர் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-

அரசமைப்புச் சட்டம் அனைத்து தளங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. உச்சநீதிமன்றத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே நீதிபதிகளாக இருக்க முடியும் என்ற சூழல் ஏன் நீடிக்கிறது? அங்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாத நெருக்கடியை எது தருகிறது. இன்னும் இந்த நாட்டை மனுஸ்மிருதி தான் ஆண்டு கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக போராட வேண்டியிருக்கிறது.

சமூகத்தில் சாதி இருக்கிறது. இந்தியாவில் சாதி பார்க்காமல் எந்த செயலும் மனித குலத்தில் இல்லை. இதன்மூலம் சனாதன சட்டமே இயங்குகிறது, அரசமைப்புச் சட்டம் அல்ல என்பது தெளிவாகிறது. சமூக நீதி மூலமாகவே சமூக ஜனநாயகத்தை கொண்டு வர முடியும். ஆனால், முன்னேறிய சமூகத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு இடஒதுக்கீடு என்று சட்டத்தை கொண்டு வந்து சமூக நீதியை கேள்விக்குறியாக்கியிருக்கின்றனர். அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதன் மூலமாகவே குடியரசை பாதுகாக்க முடியும்.

அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான கருத்து கொண்ட சனாதன சக்திகள் ஆட்சியில் இருக்கிறார்கள். அவர்கள் தமிழ்நாட்டிலும் வேரூன்ற பார்க்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் வேரூன்றுவதற்கு சிலர் அடித்தளம் அமைத்து கொடுக்கிறார்கள். பெரியாரை கொச்சைப்படுத்துகிறார்கள். பெரியாரை விமர்சிக்கிறார்கள். பெரியாரும், அம்பேத்கரும் ஒரே திசைவழியில் சிந்தித்தவர்கள். ஒரே திசைவழியில் பயணித்தவர்கள். ஒரே இலக்கை நோக்கி பயணித்தவர்கள். அந்த ஒற்றை இலக்கு சமத்துவம் தான். பெரியாரை கொச்சைப்படுத்துகிறார்கள் என்றால் இவ்வளவு கோட்பாடுகளையும் தகர்க்கிறார்கள் என்று பொருள். அம்பேத்கரையும், மார்க்ஸையும் புறக்கணிக்கிறார்கள் என்பதே பொருள். அவர்கள் முற்போக்கு சிந்தனைக்கு எதிரானவர்கள் என்றே கருத வேண்டும். நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேடிக்கை பார்க்கக் கூடியவர்களாக இருக்க கூடாது.

நாம் எப்போதும் அடையாள அரசியலைப் பிடித்து கொண்டு தொங்குபவர்கள் அல்ல. அம்பேத்கரை நாம் சாதிய அடையாளமாகவோ, மத அடையாளமாகவோ புரிந்து கொள்ளவில்லை. அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் மூவரையும் கோட்பாட்டு அடையாளமாக தான் பார்க்கிறோம். சமத்துவத்திற்கான வழிகாட்டும் அடையாளங்கள் அவர்கள். அப்போது தான் நாம் தேசத்தை பாதுகாக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்வில், அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே, ஆர்.சுதா எம்.பி., உள்ளிட்டோரும் பங்கேற்று பேசினர்.