முல்லைப் பெரியாறு அணை உடையும் என்பது காமிக்ஸ் கதைபோல் உள்ளது: உச்ச நீதிமன்றம்!

முல்லைப் பெரியாறு அணை உடையும் என்று அச்சத்தில் இருப்பதாகக் கூறுவது காமிக்ஸ் கதைபோல் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை உறுதியாகவே உள்ளது. ஆனால், அது உடைந்து விடும் என்று கூறி மக்களை அச்சத்தில் ஆழ்த்துவது, காமிக்ஸ் (நகைச்சுவை) கதைகளை சொல்வது போல உள்ளது என உச்ச நீதிமன்றம், மனுதாரர் தரப்பு வாதம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரளத்தைச் சேர்ந்த ஜோ ஜோசப் உள்ளிட்ட சிலர், உச்ச நீதிமன்றதில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரிஷிகேஷ் ராய், முல்லைப் பெரியாறு அணை உறுதியாகவே உள்ளது. 130 ஆண்டுகளுக்கும் மேல் அது பாதுகாப்பாக நின்றுகொண்டிருக்கிறது. அது எத்தனையோ பருவமழையைக் கண்டும் இன்னும் நிலையாகவே உள்ளது. ஆனால், அணை உடைந்துவிடும் என்று மக்கள்தான் அச்சத்தில் உள்ளதாகக் கூறுகிறார்கள்.

மக்கள் ஏதோ அச்சத்தில் இருப்பதாகக் கூறுவதுதான் காமிக்ஸ் கதைகள் போல இருக்கிறது. நானும் கேரளத்தில் வசித்துள்ளேன். நம்மை விட வயதில் இரு மடங்கு வயது அதிகம் கொண்ட முல்லைப் பெரியாறு அணை இன்னமும் உறுதியாகவே உள்ளது. முல்லைப் பெரியாறு அணை உறுதியாக உள்ளது. பருவமழை பல கண்டும் நிலையாக உள்ள அணையை கட்டிய பொறியாளர்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.