மக்கள் வாழ்வை வளமாக்குவதற்கு என்ன செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஆர்.பி. உதயகுமார்!

தன் மகன்,பேரன்களுக்காக ஆட்சி அதிகாரத்தில் துண்டு போட்டு வைப்பதையே கடமை என்று நினைத்து செயல்படுகிறாரே தவிர, மக்கள் வாழ்வை வளமாக்குவதற்கு என்ன செய்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எனக் கேள்வி எழுப்பியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

மதுரை பாஜக கிழக்கு மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் பி.செந்தில்குமார் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது. அவர்களை, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

சட்ட ஒழுங்கை காப்பாற்றும் காவல் துறையை கலங்கி நிற்கும் பொழுது, தமிழக மக்களிடத்திலே மிகப்பெரிய கவலையும் அச்சமும் ஏற்பட்டது. குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுத்து, சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய காவல்துறையைச் சேர்ந்த சிலரே குற்றச்செயலில் ஈடுபடுவது ஒரு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை உங்கள் நண்பன் என்று சொல்லுகிற அந்த நிலையை நாம் எப்போது மீண்டும் பார்க்க முடியும் என்கிற ஒரு ஏக்கம் மக்களிடத்திலே தற்போது நிலவிகொண்டிருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பேற்ற நாள் முதல்,பாலியல் வன்கொடுமைகள், குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை காப்பாற்ற முயற்சிப்பது என வெந்து புண்ணில் வேலை பாய்ச்சுவது போல உள்ளது.

போதை பொருள் நடமாட்டம் சுனாமி போல் கிராமம் முழுவதும் சூழ்ந்து உள்ளது. இந்த தமிழ் சமுதாயத்தை எப்படி நாம் போதை பொருள் நடமாட்டத்தில் இருந்து பாதுகாக்க போகிறோம் என்கிற ஒரு அச்சம் நிலவி வருகிறது. கொலை, கொள்ளை சம்பவங்கள் காட்டுத்தீயாக இன்னைக்கு பரவிக் கொண்டிருக்கிறது. தடுக்க வேண்டிய காவல்துறையை குற்றவாளிகளாக துணை நிற்கிற போது நாம் எங்கே போய் முறையிடுவது. அண்மையிலே பணமோசடி வழக்கு ஒன்றில் காவல்துறையை சேர்ந்த சிலர் ஈடுபட்டது தொடர்பான வழக்கிலே உயர்நீதிமன்ற நீதியரசர்கள் இதுகுறித்து கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். 20 லட்ச ரூபாயை ஹவாலா பணம் என்று பறிமுதல் செய்த திருவல்லிக்கேணி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராஜா சிங், வருமான வரித்துறையை சேர்ந்த தாமோதரன் பிரதீப் பிரபு ஆகியோர் சேர்ந்து அதில் ரூபாய் 15 லட்சத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த வழக்கிலே ராஜாசிங் உள்பட நான்கு பேரையும் திருவல்லிக்கேணி காவல்துறை கைது செய்திருக்கிறது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது.

இன்றைக்கு ஒவ்வொரு நாளும் மக்கள் செத்து செத்து பிழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். விளையாட்டு வீரர்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை. விளையாட்டு வீரர்கள் பாதுகாப்பு குறித்து அந்த செய்தி மறைக்கப்படுகிறது. இது நாடா? சுடுகாடா? என்று கூட நிலை உருவாகிவிட்டது. மக்கள் விரோத செயல்களிலே காவல் துறையினர் சிலர் ஈடுபடுவது காவல்துறை மீது மக்களுக்கு ஒரு தீவிர அவநம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் போராடி கொண்டிருக்கிறார்கள் இப்படி தான் தமிழ்நாடு இருக்கிறது. மீண்டும் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்படும், போதை பொருள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படும், பாலியல் வன்கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட்டு சட்ட ஒழங்கு சீரழிவை இரும்பு கரம் கொண்டு தடுத்து நிறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.