காரல் மார்க்ஸ், வெண்மணி தியாகிகள் நினைவு சின்னம், வைக்கம் போராட்டம் குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
சகஜானந்த அடிகளாரின் 135வது பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி தனது வரலாற்று அறிவு சூனியத்தை வெளிப்படுத்தியுள்ளார். கால் நூற்றாண்டுகளுக்கு முன்பு புத்தாயிரம் தொடங்கிய போது, அறிஞர்களில் தலைசிறந்த பேரறிவாளர் காரல் மார்க்ஸ் என்பதை உலகம் ஒப்புக் கொண்ட வரலாற்று உண்மையை அறியாதவர் ஆளுநர் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார்.
சமூக இயக்கத்தின் தோற்றம் தொடங்கி, பதினெட்டாம் நூற்றாண்டு வரையான கால கட்டத்தை பகுத்தாய்ந்து, சமூக இயக்கவியல் விதிகளின் அறிவியல் அடிப்படைகளை நிறுவிக் காட்டி சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் காரல் மார்க்ஸ். சமூக புல்லுருவியாக உருவான புரோகிதக் கும்பல், ஆதிக்க சக்திகளை வசப்படுத்தி, தங்களை நிலைநிறுத்திக் கொள்ள, மனுவின் வர்ணாசிரம கருத்தியலில் சாதிய அடுக்குமுறையில் சமூகத்தை கட்டமைத்து, சனாதன தர்ம சாஸ்திரங்கள் மூலம் மனிதர்களை பிளவு படுத்தி இருக்கிறது. இந்த சமூக அநீதியை எதிர்த்து போராடிய மக்களில் ஒரு பகுதியினர் சகோதரத்துவக் கொள்கையால் ஈர்க்கப்பட்டதும், தொட்டால் தீட்டு, பார்த்தால் பாவம் என்று உழைக்கும் மக்களை ஒதுக்கி வைத்த தீண்டாமைக்கு இலக்காகி வந்த மக்கள் அறிவுத்தேடலுக்கும், வைத்திய உதவிக்கும் கிருத்துவ சமயம் சார்ந்தனர் என்பதும் வரலாறு கூறும் தகவல்.
ஆன்மீக அறநெறி சார்ந்த சமூகப் பெரியவர்கள் பலர் சாதிய அடுக்குமுறை சமூகத்தை சீர்திருத்த போராடி இருப்பதை கம்யூனிஸ்டுகள் எப்போதும் உயர்த்திப் பிடித்து வந்துள்ளனர். பெரியார் ஈவெரா, சிந்தனை சிற்பி சிங்கார வேலர், பேராசான் ஜீவானந்தம், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்றோர் சுயமரியாதை சமதர்ம இயக்கம் மூலம் நடத்திய பகுத்தறிவுப் பரப்புரை சனாதன சாஸ்திர முறைகளின் சமூக அநீதி முகமூடியை கிழித்து எறிந்துள்ளது.
ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்டத்தின் கீழ் தஞ்சை பகுதியில் கீழ் வெண்மணி கிராமத்தில் ஊதிய உயர்வு கேட்டு போராடிய விவசாயத் தொழிலாளர்கள் 44 பேர், சாதி வெறியின் நீசத்தனத்தால் தீ வைத்து கொல்லப்பட்டனர். சாதியின் பெயரால் அழித்தொழிக்கப்பட்ட அந்த மக்களின் போராட்ட உணர்வை, வேட்கையை, உறுதியை வெளிப்படுத்தும் வகையில் உழைக்கும் மக்களின் உற்ற தோழர்களால் நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது.
கற்பூரத்தின் வாசனை அறியாத விலங்கின் உணர்வு கொண்டு மனித வடிவில் வாழ்வோர் வரலாற்று உண்மைகளை அறிந்து கொள்ள முடியாது. இந்த வகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் காரல் மார்க்ஸ், வெண்மணி தியாகிகள் நினைவு சின்னம், வைக்கம் போராட்டம் குறித்து அறிவுக்கு பொருந்தாத, வெறுப்பையும், சாதிய வெறியினையும் தூண்டி விடும் வன்மம் வடியும் விஷமத்தனக் கருத்துக்களை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.