மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியுடன் நாளை(ஜன. 30) அரிட்டாபட்டி செல்லவிருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-
சென்னை ஈ.சி.ஆரில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. அங்கு காரில் பெண்களை துரத்திய சம்பவம் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்கெட்டுள்ளது என்பதற்கு ஈசிஆர் சம்பவம் ஓர் உதாரணம். அப்பகுதிகளில் காவல் துறை ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும். காவல்துறைக்குத் தேவையான வாகனங்களை அரசு வாங்கி அவர்களுக்கு வழங்க வேண்டும். காவல்நிலையங்களை அதிகப்படுத்த வேண்டும்.
பெண்கள் எப்போது வெளியே சென்றாலும் பாதுகாப்பற்ற சூழல் இருக்கிறது. தமிழகத்திற்கு இன்னும் முழு சுதந்திரம் கிடைக்கவில்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க திமுக அரசு ஒரு துரும்பைக்கூட கிள்ளி போடவில்லை.
பல அரசியல் கட்சி தலைவர்கள் டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் அரசியலாக்குகின்றனர். முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால்தான் நடந்ததாகக் கூறுகிறார். இதற்குமுன் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எல்லாம் நடந்திருக்கிறதா?
டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்பட்டதற்குக் காரணம் பிரதமர் மோடிதான். நாளை(வியாழக்கிழமை) அரிட்டாப்பட்டி சென்று விவசாயிகளைச் சந்திக்கிறோம். மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியுடன் நாளை நானும் அரிட்டாபட்டி, வல்லாளப்பட்டி சென்று மக்களைச் சந்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.