காரில் கட்சி கொடி கட்டியதாலேயே திமுக என ஆகிவிடுமா?: திருமாவளவன்!

குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் காரில் கட்சிக் கொடி கட்டப்பட்டிருப்பதாலேயே அவர்கள் திமுகவினர் என்கிற முடிவுக்கு வந்துவிட முடியாது என்று திருமாவளவன் கூறினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜனவரி 30) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருவது தொடர்பாகவும், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்களை காரில் துரத்திய சம்பவம் தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த திருமாவளவன் கூறியதாவது:-

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை ஒரு விளக்கம் அளித்துள்ளது. சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்கு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் காரில் கட்சிக் கொடி கட்டப்பட்டிருப்பதாலேயே அவர்கள் திமுகவினர் என்கிற முடிவுக்கு வந்துவிட முடியாது; அதற்கு அந்த கட்சி பொறுப்பாக முடியாது. யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேங்கையவயல் கிராமத்தை காவல்துறையினர் தனித் தீவு போல் மாற்றியுள்ளனர். வக்ஃப் வாரிய மசோதாவை பொறுத்தவரை கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டது. ஆனால் ஆலோசனை கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களை பேச அனுமதிக்கவே இல்லை. அந்த கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களை பலமுறை வெளியேற்றி இருக்கிறார்கள். மீண்டும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு பாஜக அரசு முயற்சிக்கிறது. அரசமைப்பு சட்டத்திற்கு எதிரான அரசு பாஜக அரசு என்பதை உறுதிபடுத்தும் வகையில் இந்த விவகாரத்தில் நடந்து கொள்கிறார்கள். இந்த போக்கை விசிக வன்மையாக கண்டிக்கிறது.

இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக வாய் திறக்கவே இல்லை. சிறிய பிரச்சனைகளை ஊதி பெருக்குகிறார்கள். எல்லாவற்றுக்கும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுவிட்டது என்று திமுக அரசை குற்றம் சாட்டுவதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள். தேசிய அளவில் பாஜக அரசு வெகுமக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கண்டிப்பதே இல்லை. அதிமுகவின் இந்த போக்கு அதிர்ச்சி அளிக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட போட்டியிடவில்லை என்பது அவர்கள் அரசியல் ரீதியாக எந்த அளவிற்கு வலுவிழந்து வருகிறார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.