நீங்க தூத்துக்குடியில் போட்டியிட்டது ஏன்?: கனிமொழிக்கு சீமான் கேள்வி!

பெரியார் விவகாரத்தில் சீமானை மறைமுகமாக கூலிக்காரர்கள் என்று கனிமொழி எம்பி விமர்சித்து இருந்தார். இதற்கு, ‛‛உங்க அப்பா தான் பெரிய கூலி. சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு என்றால் நீங்கள் ஏன் தூத்துக்குடியில் 2 முறை போட்டியிட்டீர்கள்?. கனிமொழி நாடார் என்றால் உதயநிதி ஸ்டாலின், முக தமிழரசு எல்லாரும் நாடார் தானே. ஒரு அப்பாவுக்கு 2 ஜாதி இருக்குமா?” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பெரியாரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்களும், பெரியாரிஸ்ட்டுகளும் சீமானை சாடி வருகின்றனர். அந்த வகையில் நேற்று தூத்துக்குடி எம்பி கனிமொழி, சீமானை விளாசினார். சீமானின் பெயரை கூறாமல் பேசிய கனிமொழி, ‛‛தந்தை பெரியாரை இழிவுப்படுத்தும் சில கூலிக்காரர்களை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொழுது போக வேண்டும் என்பதற்காக கவர்னரை கொண்டு வைத்துள்ளார்கள்” என்று கூறினார்.

இதுபற்றி ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரம் மேற்கொண்டு வரும் சீமானிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். திமுக எம்பி கனிமொழி எம்பி, ‛‛உங்களை கூலிக்காரர்கள் என்று விமர்சனம் செய்துள்ளாரே?” என்று பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு சீமான் பதிலளித்து கூறியதாவது:-

அவரது (கனிமொழி) தந்தை கருணாநிதி மற்றும் திமுகவை தோற்றுவித்த அண்ணாவை தான் கூறுகிறார். ஏனென்றால் நான் பெரியாரை இழிவுப்படுத்தவில்லை. பெரியார் என்ன பேசியிருந்தாரோ? எழுதியிருந்தாரோ? அதை எடுத்து பேசுகிறேன். கனிமொழி உள்பட அனைவரும் பெரியாரை பற்றி தான் பேசுகிறார்கள். பெரியார் என்ன பேசினார்? பெரியார் என்ன எழுதி வைத்தார்? என்று கூறும் துணிவு யாருக்கும் இல்லை. பெரியார் யார் தெரியுமா? என்று கேட்கிறீர்கள். தெரியவில்லை சொல்லுங்கள் என்றால் சொல்ல மறுக்கிறீர்கள்.

பெரியாரை திமுகவின் அண்ணா, கருணாநிதியை விட யாராவது இழிவாக பேசி இருக்கிறார்களா? நீங்கள் (கனிமொழி) சொல்லும் பெரிய கூலி உங்க அப்பா தான். நீங்கள் உங்க அப்பாவை தான் எதிர்த்து பேசி கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு பெரியாரிஸ்ட்டா? எந்த இடத்தில் கடவுள் மறுப்பு கொள்கையிலா? மருமகன் உதயநிதி நெற்றியில் திருநீர் பூசினீர்களா? இல்லையா? சமூக நீதி, பெண்ணிய உரிமைக்கு வருவோம். உங்கள் கட்சியில் பெண்ணுரிமைக்கு கொடுத்ததை பேச முடியுமா?

சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு என்றால் நீங்கள் ஏன் தூத்துக்குடியில் 2 முறை போட்டியிட்டீர்கள்?. தமிழ்நாட்டில் இத்தனை தொகுதிகள் உள்ளபோது தூத்துக்குடிக்கு போய் போட்டியிட்டது ஏன்? சென்னை, கோவை, ஈரோடு, சேலம், வேலூர், விழுப்புரத்தில் போட்டியிட்டு இருக்கலாமே? காரணம் என்ன? எதற்கு தூத்துக்குடியில் போய் நின்றீர்கள்? இதுதான் ஜாதி ஒழிப்பா? அங்கு பாவப்பட்ட மக்கள் இருக்காங்க. இன்னும் அந்த மக்கள் தன் ஜாதி என்று உங்களை (கனிமொழி)நம்புறாங்க பாருங்க.. அந்த அளவுக்கு மக்களை பைத்தியக்காரர்களாக மாற்றி வைத்துள்ளீர்கள் நீங்கள். உங்க ஆளு, உங்க ஜாதிக்காரர் என்று நம்ப வைக்கின்றீர்கள். கருணாநிதி மகள் எப்படி நாடாராக இருக்க முடியும்? கனிமொழி நாடார் என்றால் உதயநிதி ஸ்டாலின், முக தமிழரசு எல்லாரும் நாடார் தானே. ஒரு அப்பாவுக்கு 2 ஜாதி இருக்குமா? அப்படி என்றால் எந்த அடிப்படையில் தூத்துக்குடியில் போய் நின்றீர்கள்? பெரியாரை பற்றி ஏதாவது பேச தகுதி இருக்கா? சும்மா கூலி, காலினு சொல்லிக்கிட்டு.. பெரிய கூலியே உங்க அப்பா தான். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சீமான் எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது:-

கிழக்கு கடற்கரை சாலையில் நள்ளிரவில் மகிழுந்தில் பயணித்த பெண்களை, திமுக கொடி கட்டிய மகிழுந்தில் பயணித்த சிலர் குடிபோதையில் வழிமறித்து மிரட்டி தாக்க வந்ததோடு, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வீடுவரை வீடுவரை துரத்திச் சென்ற காட்சிகள் நெஞ்சைப் பதறச்செய்கின்றன.

பெண்கள் புகாரளித்தும் திமுக அரசின் காவல்துறை நான்கு நாட்களாக முறையான விசாரணை மேற்கொள்ளாததும், குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டி சமரசம் பேசி வழக்குப் பதிவு செய்ய மறுத்ததும் வெட்கக்கேடானது; வன்மையான கண்டனத்துக்குரியது.

இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்று வாய்க் கூசாமல் பேசுவதற்கு மனச்சான்று உறுத்தவில்லையா முதல்வர் அவர்களே? குற்றச்செயலில் ஈடுபடும் ஆளும் திமுகவைச் சேர்ந்த கொடூரர்களைக் காப்பாற்ற துணைநிற்பதுதான் திராவிட மாடலா? திமுக ஆட்சியில் நிகழும் அத்தனை அட்டூழியங்களுக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.