தவெகவில் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமாருக்கு முக்கியப் பொறுப்புகள்: விஜய் அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜுனா தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், நிர்மல் குமாருக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் துணை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளராக இருந்த நிர்மல் குமார், விசிகவின் முன்னாள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தனர். இந்நிலையில், ஏற்கெனவே 2 கட்ட மாவட்டச் செயலாளர்கள நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 3-ஆம் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் பதவியும், நிர்மல் குமாருக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் துணை பொதுச் செயலாளர் பொறுப்பும், பி.ஜெகதீஷுக்கு தலைமைக் கழக இணைப் பொருளாளர் பொறுப்பும் வழங்கப்படுவதாக விஜய் அறிவித்துள்ளார். பிரபல யூடியூபரும், பேச்சாளருமான ராஜ்மோகன் தவெகவின் கொள்கை பரப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அவரது அறிக்கையின் விவரம்:

1. ஆதவ் அர்ஜுனா: தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச்செயலாளர்
2. CTR. நிர்மல் குமார்: துணைப் பொதுச்செயலாளர் ( தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு)
3. P.ஜெகதீஷ் : தலைமைக் கழக இணைப் பொருளாளர்
4. A.ராஜ்மோகன் : கழகக் கொள்கைப் பரப்புச் செயலாளர்
5. லயோலா மணி (எ) A.மணிகண்டன் : கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்
6. பேராசிரியர் A.சம்பத்குமார்: கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்
7. J.கேத்ரின் பாண்டியன் : கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்
8. S.வீரவிக்னேஷ்வரன் : செய்தித் தொடர்பாளர்
9. S.ரமேஷ் B.E. இணைச் செய்தித் தொடர்பாளர்
10. R.ஜெயபிரகாஷ் : தகவல் தொழில் நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்
11. A.குருசரண்: தகவல் தொழில் நுட்பப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
12. R.J.ரஞ்சன் குமார் : தகவல் தொழில் நுட்பப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
13. த R.குருமூர்த்தி : சமூக ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்
14. R. ராம்குமார் : சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
15. P. வெங்கடேஷ் : சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
16. R.நிரேஷ் குமார் சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
17. S.அறிவானந்தம் : சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
18. B. விஷ்ணு: சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
19. A.ஃப்ளோரியா இமாக்குலேட்: சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

மேற்கண்ட பொறுப்புகளில் நியமிக்கப்படுபவர்கள் அனைவரும் எனது உத்தரவு மற்றும் ஆலோசனைக்கிணங்க. கழகப் பொதுச்செயலாளர் என்.ஆனந்தின் வழிகாட்டுதலின்படி கழகப் பணிகளை மேற்கொள்வார்கள். கழகத் தோழர்களும், அனைத்து நிலை நிர்வாகிகளும் புதிய பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பை நல்கி, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கானக் கட்டமைப்பு மற்றும் தேர்தல் முன்னெடுப்புகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆதவ அர்ஜுனா, என்னுடைய அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியுடன் இணைந்து, அவரது அரசியல் வியூகங்களைப் பின்பற்றி தேர்தல் பிரச்சாரங்களை வடிவமைத்து, தேர்தல் மேலாண்மைப் பணிகளை மேற்கொள்வார். இவ்வாறு தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.