நீதிமன்ற தீர்ப்பு இந்தியாவில் அரசியல் கட்சிகளையே இல்லாமல் செய்துவிடும்: சிபிஎம்!

பொது இடங்களில் அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களை வைப்பது தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை, மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.

கடந்த 27ம் தேதி இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, “நிரந்தரமாக கட்சி கொடிக்கம்பங்களை வைக்க எந்த விதிகளும் இல்லாத நிலையில், எவ்வாறு கட்சி கொடிக்கம்பங்கள் வைக்கப்படுகின்றன? அந்த இடத்திற்கு சம்பந்தப்பட்ட கட்சியினர் வாடகை செலுத்தலாமே? பொது இடங்களில் ஏராளமான கட்சி கொடிக்கம்பங்கள் உள்ளன. இதனால் ஏராளமான பிரச்னைகள் எழுகின்றன. பொதுவான இடத்தில் கட்சிக்கொடி கம்பத்தை வைக்க ஏன் அனுமதி கோருகிறீர்கள்? தங்களது வீடுகளில் வைத்துக் கொள்ளலாமே?. பொது இடம் பொதுமக்களுக்கானது. அங்கு தான் கொடி கம்பங்களை வைக்க வேண்டும் என்றால் சொந்தமாக நிலம் வாங்கி வைத்துக் கொள்ளலாமே? பஸ் நிலையங்கள் அருகே ஏராளமான கட்சிக் கொடி கம்பங்கள் உள்ளன.

பொது இடங்களில் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மற்றும் மதம், சாதி சம்பந்தமான அமைப்புகள் கொடிக்கம்பங்களை வைப்பதால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி போக்குவரத்துக்கு இடையூறு, விபத்து ஏற்படுகிறது. இதனால், பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்கள் உருவாகின்றன. சில அரசியல் கட்சிகள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு அதிக அளவிலான உயரங்களிலும் கட்சி கொடிக்கம்பங்களை அமைக்கின்றன. இது ஏற்கத்தக்கதல்ல. இதனை கருத்தில் கொண்டு கொடிக்கம்பங்கள் நடுவதில் நீதிமன்றம் கீழ்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கிறது. தமிழ்நாட்டில் தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்கள் மற்றும் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் அனைத்து கொடிக்கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும். தவறினால் அரசே அகற்றி விட்டு அதற்குரிய செலவு தொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க வேண்டும். எதிர்காலங்களில் பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் அமைப்பதற்கு வருவாய்த்துறையினர் அனுமதிக்கக் கூடாது. பட்டா இடங்களில் கொடி கம்பங்கள் அமைப்பது குறித்து அரசு உரிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.

பொதுக்கூட்டங்கள் மற்றும் தேர்தல் நேரங்களில் கட்சி கொடிகள் வைப்பதற்கு உரிய வழிகாட்டுதலை ஏற்படுத்தி அதன் அடிப்படையில் அனுமதி வழங்கலாம். அவ்வாறு அனுமதி வழங்கும்பட்சத்தில் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தக் கூடாது என்ற உறுதிமொழியையும், வைப்புத் தொகை மற்றும் வாடகை தொகையும் வசூல் செய்திருக்க வேண்டும். இந்த விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். இந்த உத்தரவை அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உடனடியாக அனுப்பி அதை செயல்படுத்த வேண்டும். நீதிமன்ற உத்தரவு முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் உறுதிப்படுத்த வேண்டும்.

பொது இடங்களில் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மற்றும் மதம், சாதி சம்பந்தமான அமைப்புகள் கொடிக்கம்பங்களை வைப்பதால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி போக்குவரத்துக்கு இடையூறு, விபத்து ஏற்படுகிறது. இதனால், பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்கள் உருவாகின்றன. சில அரசியல் கட்சிகள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு அதிக அளவிலான உயரங்களிலும் கட்சி கொடிக்கம்பங்களை அமைக்கின்றன. இது ஏற்கத்தக்கதல்ல. இவ்வாறு நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த உத்தரவு, இந்தியாவில் அரசியல் கட்சிகளையே இல்லாமல் செய்துவிடும் என்று சிபிஎம் விமர்சித்துள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளதாவது:-

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை 27.01.2025 அன்று கொடிக்கம்பங்கள் குறித்து வழங்கியுள்ள தீர்ப்பு அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமையையும், ஜனநாயகத்தையும் மறுப்பதாகும். நீதித்துறையின் அத்துமீறலும் ஆகும்.

அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களோ, விளம்பர பலகைகளோ பொதுமக்களுக்கு இடையூறாகவோ, இடைஞ்சலாகவோ இருக்கும் பட்சத்தில் அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கு நிர்வாக ரீதியான பல்வேறு கட்டுப்பாடுகள் தற்போது அமலில் இருக்கின்றன. அவை முறையாக அமல்படுத்தப்படவில்லை என்றோ போதுமானதாக இல்லை என்றோ நீதிமன்றம் கருதும்பட்சத்தில் முறையாக அமல்படுத்துவதற்கும், தேவையான கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பிப்பதை யாரும் கேள்விக்குள்ளாக்க முடியாது. ஆனால், ஒட்டுமொத்தமாக பொது இடங்களில் எங்குமே கொடிக்கம்பங்கள் வைக்கக் கூடாது என்பது அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகள் குறித்த 19 (1) (a)வை மீறுவதாகும்.

அரசியல் கட்சிகள் தங்களுடைய கொள்கைகளையும், கோட்பாடுகளையும், தத்துவத்தையும் பொதுமக்களிடம்தான் சொல்ல வேண்டியிருக்கும். அது ஒரு இடையறாத பணி. அதை மறுப்பது அரசியல் கட்சிகள் அற்ற நாட்டை உருவாக்குவதற்கு சமமாகும். மேலும், ஒரு அரசியல் கட்சி தன்னுடைய இடத்தில் கொடிக்கம்பம் நிறுவுவதாக இருந்தாலும் நிர்வாக அனுமதி பெற வேண்டுமென்பது நீதிமன்றங்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டு ஆணைகள் வழங்கலாம் என்று கருதுவதாகும். ஒரு தனியார் இடத்தில் சட்டத்திற்குட்பட்ட எதுவும் செய்து கொள்ளலாம் என்கிற போது கொடிமரத்திற்கும் மட்டும் நிர்வாக அனுமதி பெற வேண்டுமென்பது ஜனநாயகம் குறித்த சகிப்புத்தன்மையற்ற சிந்தனையாகும்.

நவீன தாராளமயக் கொள்கைகள் சுரண்டலையும், ஒடுக்குமுறையையும் தீவிரமாக்கிக் கொண்டிருக்கும் காலத்தில் அரசமைப்பின் அங்கங்கள் அவற்றிற்கு துணை போகும் வகையில் சுவரொட்டிகள் ஒட்ட தடை விதிப்பது, ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் இயக்கங்கள் – போராட்டங்கள் நடத்தச் சொல்வது, மக்களிடையே பிரச்சாரம் செய்ய அனுமதிக்க மறுப்பது என்று பாதிக்கப்பட்ட மக்கள் போராடுவதை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது வழக்கமாக உள்ளது. நிர்வாக அமைப்புகளின் அதே மனநிலையிலிருந்து நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அமைந்திருப்பது ஏற்கத்தக்கதல்ல.

எனவே, உயர்நீதிமன்றம் 27.01.2025ல் தான் வழங்கிய கொடி மரங்கள் குறித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும், தமிழ்நாடு அரசு இந்த தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு பெ.சண்முகம் கூறியுள்ளார்.