”தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கருணாநிதி சிலைகளையும், அவர் பெயரிலான திட்டங்களையும் தொடங்குவதில்தான் திமுக அரசு அக்கறையாக உள்ளது. விட்டால் அண்ணா உருவாக்கிய தமிழ்நாட்டை கூட கருணாநிதி நாடு என்று பெயரை கூட சூட்டிவிடுவார்கள்” என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கையை வைத்த ஆர்.பி.உதயகுமார் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி முதல்வராக இருந்தபோது திருமங்கலம் தொகுதியில் உள்ள செக்கானூரணி பேருந்து நிலையம் சீரமைப்பு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதிய பேருந்து நிலையம் வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து நான் கோரிக்கை வைத்த அடிப்படையில், 8 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தற்போது பூமி பூஜை போடப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்திற்கு தென்மாவட்டத்தில் கல்வி வளர்ச்சிக்கு தன்னையே அர்ப்பணித்தவரும், கட்சித்தீவு பிரச்சனைக்கு சட்டமன்றத்தில் குரல் கொடுத்த மூக்கையா தேவரின் திருவுருவ சிலையை வாயிலில் அமைத்தும், பேருந்து நிலையத்திற்கு மூக்கையா தேவர் பெயரையும் சூட்ட வேண்டும். திருமங்கலம், ராஜபாளையம் ரோட்டில் நான்கு வழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் இந்த சாலை ஆலம்பட்டி, சுப்புலாபுரம் ஊருக்குள் வருகிறது. மக்கள் கோரிக்கையை ஏற்று அணுகு சாலை மற்றும் சுரங்கப்பாதை அமைத்திட வேண்டும்.
கடந்த தேர்தல் அறிக்கையில் திமுக 525 வாக்குறுதியை கொடுத்தனர். இவற்றில் பெரும்பாலானவற்றை இன்னும் நிறைவேற்றவில்லை. நீதிமன்றமே ஸ்டாலின் அரசின் சட்டம் ஒழுங்கை கடுமையாக கண்டித்துள்ளது. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கருணாநிதி சிலைகளையும், அவர் பெயரிலான திட்டங்களையும் தொடங்குவதில்தான் திமுக அரசு அக்கறையாக உள்ளது. விட்டால் அண்ணா உருவாக்கிய தமிழ்நாட்டை கூட கருணாநிதி நாடு என்று பெயரை கூட சூட்டிவிடுவார்கள்.
டங்ஸ்டன் விவகாரத்தில் கே.பழனிசாமி இரண்டரை மணி நேரம் சட்டமன்றத்தில் திமுகவை தோலுரித்துக் காட்டினார், அவர் கொடுத்த நெருக்கடியாலே சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டங்ஸ்டன் திட்டம் வந்தால் ராஜினாமா செய்வேன் என்று கூறினார். அதிமுக ஆட்சியில் தமிழகம் மதக்கலவரம் இல்லாத பாதுகாப்பான மாநிலமாக இருந்தது. தற்போது இந்துகள், முஸ்லிம்கள் சகோதரர்கள் பேலா் வசிக்கும் திருப்பரங்குன்றத்தில் பல ஆண்டுகளாக இல்லாத அளவில் ஏன் இந்த புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு திருப்பரங்கன்றம் விவகாரத்தில் அமைதி ஏற்படுத்தாமல் ஏன் வேடிக்கை பார்க்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.