பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மக்களவையில் இன்று காலை 11.02 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் தனது உரையில் வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்…
வருமான வரி உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்வு: புதிய வருமான வரி விதிப்பு (New Regime) முறையின்படி வருமான வரிக்கான உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்துடன், கூடுதலாக ரூ.75,000 கழிவும் கிடைக்கும். வருமான வரி விலக்கு உச்ச வரம்புக்கு மேலாக ஆண்டு வருமானம் ஈட்டுவோருக்கான வரிகள் விவரம்:
ரூ.4 லட்சம் வரை – வரி இல்லை
ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை – 5% வரி
ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 10% வரி
ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை – 15% வரி
ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை – 20% வரி
ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை – 25% வரி
ரூ.24 லட்சத்துக்கு மேல் 30% வரி
புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும்.
வருமான வரி தாக்கல் செய்யப்படுதல் எளிதாக்கப்படும்.
மூத்த குடிமக்களுக்கு ரூ.50,000 வரை வரி பிடித்தம் கிடையாது.
தனிநபர் வருமான வரி சீர்திருத்தங்கள் நடுத்தர வர்க்கத்தினர் நலனை சார்ந்ததாக இருக்கும்.
வீட்டு வாடகைக்கான டிடிஎஸ் (TDS) பிடித்தத்துக்கான வருடாந்திர வரம்பு ரூ.2.4 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் 4 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுகிறது.
புற்றுநோய், இன்னும் பிற அரிதான நோய்களுக்கான 36 வகையிலான உயிர் காக்கும் மருந்துகளுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதே வேளையில் உயிர்காக்கும் 6 மருந்துகளுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
லித்தியம் பேட்டரிகளுக்கு சுங்கவரியில் இருந்து முழுமையான விலக்கு.
பின்னலாடைகளுக்கு இறக்குமதி வரியில் சலுகை.
தோல் பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்க தோல் இறக்குமதிக்கு வரிச் சலுகை.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை நீட்டிக்கப்படுகிறது.
ஐஐடி, ஐஐஎஸ்சி உயர் கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்காக 10 ஆயிரம் ஃபெலோஷிப்கள் வழங்கப்படும்.
வேளாண் துறைக்கான அறிவிப்புகள்: வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசுகளுடன் இணைந்து புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
பருப்பு உற்பத்தியை அதிகரிக்க சிறப்பான சாகுபடியை தரும் விதைகள் வழங்கும் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்.
அசாமில் யூரியா உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும்.
பருத்தி உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
பிகாரில் மக்கானா (தாமரை விதை) உற்பத்திக் கூடம் அமைக்கப்படும்
கிசான் கடன் அட்டை மூலம் 7.7 கோடி விவசாயிகள் குறுகிய கால கடன்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
கிசான் கடன் அட்டை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனின் உச்ச வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெற 6 ஆண்டு கால சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
பிகாரில் தேசிய உணவு பதப்படுத்துதல் மையம் (நிஃப்டம் – NIFTEM) அமைக்கப்படும்.
தொழில்முனைவோருக்கு சிறப்பு அறிவிப்பு: பட்டியல், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த பெண்களுக்கு, புதிதாக தொழில்முனைவோருக்கு ரூ.2 கோடி வரை கடனுதவி வழங்கப்படும்.
காலணி மற்றும் தோல் துறையைப் பொருத்தவரையில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 22 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
பொம்மை உற்பத்தித் துறையில் இந்தியாவை அந்தச் சந்தைக்கான சர்வதேச மையமாக்கும் வகையில் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
நாடு முழுவதும் ஐஐடி கல்வி நிறுவனங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். ஐஐடி பாட்னா விரிவுபடுத்தப்படும். இதன்மூலம் கூடுதல் மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும்.
நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் 10,000 சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும்.
ஜல்ஜீவன் திட்டம் 2028 வரை நீட்டிக்கப்படுகிறது.
அடுத்த 10 ஆண்டுகளில் மாநிலங்களில் புதிதாக 100 விமான நிலையங்கள் உருவாக்கப்படும்.
செயற்கை நுண்ணறிவை கல்வியில் ஊக்குவிக்கும் வகையில் ரூ.500 கோடி முதலீட்டில் ஒரு மையம் உருவாக்கப்படும்.அடுத்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் ‘அடல் ஆய்வகங்கள்’ அரசுப் பள்ளிகளில் உருவாக்கப்படும்.
5 தேசிய திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.
காப்பீட்டுத் துறைகளுக்கான அந்நிய நேரடி முதலீட்டுக்கான வரம்பு 100 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
‘இந்தியாவின் குணமாகுங்கள்’ ஹீல் இன் இந்தியா (Heal in India) பிரச்சாரம் முன்னெடுக்கப்படும்.
பொருள் விநியோகம் செய்யும் டெலிவரி பணியில் உள்ள ஊழியர்களுக்கு மின்னணு அடையாள அட்டை வழங்கப்படும்.
அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் அடுத்த மூன்றாண்டுகளில் புற்றுநோயாளிகளைப் பராமரிக்கும் வகையில் ’டே-கேர் கேன்சர் மையங்கள்’ அமைக்கப்படும். இவற்றில் 200 மையங்களில் 2025 – 26 ஆண்டிலேயே அமைக்கப்படும்.இவ்வாறாக நிதியமைச்சர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கூச்சலிட கடும் அமளிக்கு மத்தியில் நிதியமைச்சர் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார். சில நிமிடங்கள் தொடர்ந்து கூச்சலிட்ட எதிர்க்கட்சியினர் பின்னர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் பட்ஜெட் குறித்த தனது கருத்தை பிரதமர் நரேந்திர மோடி வீடியாவாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-
நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் இன்று ஒரு முக்கியமான நாள். இது 140 கோடி இந்தியர்களின் விருப்பங்களின் பட்ஜெட். இது ஒவ்வொரு இந்தியரின் கனவுகளையும் நிறைவேற்றும் பட்ஜெட். இளைஞர்களுக்காக நாங்கள் பல துறைகளைத் திறந்துள்ளோம். வளர்ச்சி அடைந்த இந்தியாவின் நோக்கத்தை சாதாரண குடிமகன் முன்னெடுத்துச் செல்லப் போகிறார்.
இந்த பட்ஜெட் பலத்தைப் பெருக்கும். இந்த பட்ஜெட் சேமிப்பு, முதலீடு, நுகர்வு மற்றும் வளர்ச்சியை விரைவாக அதிகரிக்கும். இந்த மக்கள் பட்ஜெட்டுக்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது முழு குழுவினரை நான் வாழ்த்துகிறேன். பொதுவாக பட்ஜெட்டின் கவனம் அரசாங்கத்தின் கருவூலம் எவ்வாறு நிரப்பப்படும் என்பதில்தான் இருக்கும். ஆனால், இந்த பட்ஜெட் அதற்கு நேர்மாறானது.
குடிமக்களின் பைகளை நிரப்பவும், சேமிப்பை அதிகரிக்கச் செய்யவும், நாட்டின் வளர்ச்சிக்கு குடிமக்கள் பங்களிப்பவர்களாக மாறவும் இந்த பட்ஜெட் மிகவும் வலுவான அடித்தளத்தை அமைக்கிறது. சீர்திருத்தங்களைப் பொறுத்தவரை, இந்த பட்ஜெட்டில் பல முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அணுசக்தியில் தனியார் துறையை ஊக்குவிப்பது வரலாற்று சிறப்புமிக்கது. இது நாட்டின் வளர்ச்சியில் சிவில் அணுசக்தியின் பெரிய பங்களிப்பை உறுதி செய்யும்.
பட்ஜெட்டில், வேலைவாய்ப்புக்கான அனைத்து துறைகளுக்கும் எல்லா வகையிலும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் சீர்திருத்தங்களைப் பற்றி நான் விவாதிக்க விரும்புகிறேன். உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்குவதன் மூலம், இந்தியாவில் பெரிய கப்பல்கள் கட்டுவது ஊக்குவிக்கப்படும், தற்சார்பு இந்தியா இயக்கம் வேகம் பெறும்.
கப்பல் கட்டுவது அதிகபட்ச வேலைவாய்ப்பை வழங்கும் துறை என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதேபோல், நாட்டில் சுற்றுலாவிற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. 50 முக்கியமான சுற்றுலா நிலையங்களில் ஹோட்டல்கள் கட்டப்படும். முதல் முறையாக, ஹோட்டல்களை உள்கட்டமைப்பு வரம்பின் கீழ் கொண்டு வருவதன் மூலம், சுற்றுலாவுக்கு பெரிய ஊக்கம் கிடைக்கும். இது மிகப் பெரிய வேலைவாய்ப்புத் துறையான விருந்தோம்பல் துறைக்கு ஆற்றலை வழங்கும்.
இந்த பட்ஜெட்டில் ஒரு கோடி கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாப்பதற்காக ‘ஞான பாரத் மிஷன்’ தொடங்கப்பட்டுள்ளது. இந்திய அறிவு மரபால் ஈர்க்கப்பட்ட ஒரு தேசிய டிஜிட்டல் களஞ்சியம் உருவாக்கப்படும். அதாவது, தொழில்நுட்பம் அதன் முழு அளவிற்குப் பயன்படுத்தப்படும். பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான அறிவிப்புகள், விவசாயத் துறையிலும் கிராமப்புற பொருளாதாரத்திலும் ஒரு புதிய புரட்சிக்கு அடிப்படையாக மாறும். ‘விவசாயிகளுக்கான கடன்’ வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுவதால், இது அவர்களுக்கு மேலும் உதவும்.
இந்த பட்ஜெட்டில், ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து வருமானப் பிரிவினருக்கும், வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. இது நமது நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரிதும் பயனளிக்கும். சமீபத்தில் பணியில் சேர்ந்தவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும். புதிய தொழில்முனைவோராக மாற விரும்பும் நாட்டின் எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்களுக்கு உத்தரவாதம் இல்லாமல் ரூ. 2 கோடி வரை கடன் வழங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.