குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை விமர்சிக்கும் வகையில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி பிகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 31-ம் தேதி தொடங்கிய நிலையில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அவரின் உரை குறித்து செய்தியாளர்களிடம் கேட்டபோது சோனியாகாந்தி கூறுகையில், “உரையின் இறுதியில் குடியரசுத் தலைவர் மிகவும் சோர்வடைந்துவிட்டார். அவரால் பேச முடியவில்லை. பாவம்” என்ற தொனியில் கருத்து தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, குடியரசுத் தலைவரின் பதவியின் கண்ணியத்தை காயப்படுத்தும் வகையில் வகையில் சோனியா காந்தி கருத்து தெரிவித்ததாக குடியரசுத் தலைவர் மாளிகை அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக முசாபர்பூர் நகரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் ஓஜா என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். அதில் அவர் கூறுகையில், “நாட்டின் மிக உயரிய அரசியலமைப்பு அதிகாரத்தில் உள்ளவரை அவமதிக்கும் வகையில் கண்ணியக்குறைவாக பேசிய சோனியா காந்தி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்” என்று ஓஜா தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தி மட்டுமின்றி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வதேராவுக்கு எதிராகவும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். இந்த வழக்கு முசாபர்பூர் நீதிமன்றத்தில் பிப்ரவரி 10-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து பிரியங்கா காந்தி நேற்று கூறியபோது, ‘‘குடியரசுத் தலைவர் – சோனியா பற்றி டெல்லி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். பிரச்சாரத்தில் அதை பேச அவசியம் என்ன. இதன்மூலம், நாட்டு மக்களை பிரதமர் அவமதித்துள்ளார்’’ என்று தெரிவித்தார்.