தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக் கோரிய மனு தள்ளுபடி!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஆளுநரின் செயல்பாடு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது என குறிப்பிட்டு வழக்கறிஞர் தாக்கல் செய்த ரிட் மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழக சட்டசபையில் ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் உரையை ஆளுநர் வாசிக்கவில்லை என்பதால் அவரை நீக்க கோரி வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்த ஆண்டின் சட்டசபை கூட்டத் தொடரில் உரை நிகழ்த்தாமல் புறக்கணித்து சென்றுவிட்டார். கடந்த இரு ஆண்டுகளாக ஆளுநர் இதையே செய்கிறார் என தமிழக அரசு குற்றம்சாட்டியது.
மேலும் தேசிய கீதம் இசைக்கப்படாததால் ஆளுநர் சட்டசபையில் இருந்து வெளியேறியதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்திருந்தது. இந்த நிலையில் ஆளுநரின் இந்த புறக்கணிப்புக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில்தான் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஜனவரி 10ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டது. வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் தாக்கல் செய்த ரிட் மனுவில், ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது. ஆளுநரின் செயல்பாடு அவர் தமிழக ஆளுநராக செயல்பட விருப்பம் இல்லை என்பதையே காட்டுகிறது. விளம்பரம் தேடும் நோக்கத்திலேயே ஆளுநர் ஆர்.எந்.ரவி செயல்படுகிறார். அரசியல் சாசனத்தை மீறி ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவரின் செயலாளருக்கு பிறப்பிக்க வேண்டும் என அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என சொல்லப்பட்ட நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கை விசாரிக்க மறுத்துவிட்டது. இது போன்ற மனுக்களை விசாரிக்க முடியாது என தலைமை நீதிபதி அமர்வு கூறி, அந்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.