கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் பாஜக அரசு: செல்வப்பெருந்தகை!

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாஜக அரசு சீரழிப்பதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய பாஜக அரசு சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையில் கிராமப்புற பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கின்ற வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவின் முதுகெலும்பாக திகழ்கிற கிராமப்புற மக்களுக்கான நிதி ஒதுக்கீடு கடுமையாக குறைக்கப்பட்டிருக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் 2005-ல் நிறைவேற்றப்பட்டது.

கிராமப்புறங்களை சேர்ந்த ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் 18 வயது நிரம்பிய ஒருவருக்கு ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது சட்டப்படி உரிமையாக்கப்பட்டது. உலகிலேயே முதன்முறையாக இந்தியாவில் தான் இத்தகைய விரிவான திட்டம் செயலுக்கு கொண்டு வரப்பட்டது. இது ஒரு வறுமை ஒழிப்பு திட்டமாகும். இத்திட்டத்தில் பெரும்பாலும் பயனடைந்தவர்கள் பெண்களும், பட்டியலின மக்களும் தான். இதனால் தான் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்ததோடு, மக்களின் வாங்கும் சக்தியும் அதிகரித்து, கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 15 கோடி மக்கள் வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டனர்.

கிராமப்புறங்களில் ஏழை,எளிய மக்களிடையே பொருளாதார புரட்சி ஏற்படுவதற்கு இத்திட்டம் ஒரு காரணமாக அமைந்தது. ஆனால், இத்திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டதால் தொடக்கத்திலிருந்தே பாஜக அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 100 நாள் வேலைத் திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதில் மத்திய பாஜக அரசு உரிய முக்கியத்துவம் வழங்குவதில்லை.

100 நாள் வேலை திட்டத்தின்படி, ஜனவரி 2025-ல் நாடுமுழுவதும் 9 கோடியே 31 லட்சம் பேர் வேலை பெற்று வந்தார்கள். இதில் 75 சதவிகிதம் பெண்கள். ஆனால், இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.26 சதவிகிதமாகத் தான் இருக்கிறது. உலக வங்கியின் பரிந்துரையின்படி 1.7 சதவிகிதமாக இருக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்காத நிலையில் ஒதுக்கப்பட்ட தொகையில் 20 சதவிகிதம் ஏற்கனவே ஊதிய பாக்கிக்காக செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், 2019 முதல் 2024 வரை 4 கோடி பேர் பல்வேறு தேவையற்ற காரணங்களுக்காக வேலை வாய்ப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் அனைவருக்கும் ஆதார் அட்டை கட்டாயம் இருக்க வேண்டுமென்று வலியுறுத்தப்படுகிறது. இதன்படி 27 சதவிகித தொழிலாளர்கள் வேலை செய்தும் ஊதியம் பெற முடியாத நிலையில் உள்ளனர். வறுமையை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் இன்றைக்கு கிராமப்புற தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழப்பதோடு, வேலை செய்தும் சம்பளம் பெற முடியாத நிலையில் அலைகழிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கிராமப்புறங்களில் இருந்து தொழிலாளர்கள் நகர்ப்புறங்களுக்கு வேலை தேடி புலம்பெயர்கிற அவலநிலை ஏற்பட்டுள்ளது.

மொத்த மக்கள் தொகையில் 70 சதவிகிதம் பேர் வாழ்கிற கிராமப்புற மக்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை உறுதிபடுத்திய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கான நிதியை குறைத்து, தேவையற்ற நிபந்னைகளை விதித்து அத்திட்டத்தை முடக்குகிற மத்திய பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட்களின் நிறுவனங்களுக்கு கோடி கோடியாக வரிச் சலுகை அளிக்கிற மோடி அரசு, வேலை வாய்ப்பை வழங்குகிற இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்காமல் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிப்பதன் மூலம் மக்கள் விரோத அரசாக பாஜக அரசு விளங்கி வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.