திருப்பரங்குன்றம் செல்வதற்காக தனது அலுவலகத்தில் இருந்து தொண்டர்களுடன் புறப்பட்ட இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து இந்து முன்னணி தொண்டர்கள் திடீரென தாராபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தின் போது இந்து முன்னணி தொண்டர் ஒருவர் திடீரென பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம் தொடர்பாக இன்றைய தினம் திருப்பரங்குன்றத்தில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வெளி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் யாரும் மாவட்டத்துக்குள் வராத வகையில் கூடுதல் பாதுகாப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலிருந்து இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திருப்பரங்குன்றம் போராட்டத்துக்கு செல்ல வாய்ப்பு இருப்பதன் காரணமாக நேற்று மாலை முதல் திருப்பூர் மாவட்டத்தில் 18 பகுதிகளில் தற்காலிக சோதனை சாவடி மையம் அமைக்கப்பட்டு போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் மாநகரில் இருந்து வெளியேறும் கார் வேன் மற்றும் பேருந்துகளில் செல்பவர்கள் எங்கே செல்கிறார்கள் என்ற விவரம் சேகரிக்கப்பட்டு அவர்களது ஆவணங்கள் சரிபார்க்கப்படுகின்றது.
போராட்டத்தில் பங்கேற்க செல்வதாக கருதப்படுபவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து இன்று (பிப்.4) முருக பக்தர்களுடன் இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்பைச் சார்ந்தவர்கள் திருப்பரங்குன்றம் செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில், காலை முதல் இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் அலுவலகம் அமைந்துள்ள திருப்பூர் பெரிச்சிபாளையம் பகுதியில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மாநகர காவல் துணை ஆணையர் ராஜராஜன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து திருப்பரங்குன்றம் செல்வதற்காக கையில் வேலுடன் அலுவலகத்தில் இருந்து தொண்டர்களுடன் இறங்கி வந்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து இந்து முன்னணி தொண்டர்கள் திடீரென தாராபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியல் போராட்டத்தின் போது கைது செய்யக்கூடாது என வலியுறுத்தி இந்து முன்னணி தொண்டர் ஒருவர் திடீரென பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். அவரை தடுத்து போலீஸார் அவர் மீது தண்ணீரை ஊற்றி அழைத்துச் சென்றனர். தொடர்ந்து 300-க்கும் மேற்பட்ட வரை போலீஸார் கைது செய்து தனியார் மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். திருப்பூர் மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.