பெரியார் சிலையை அவமதித்தவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க வேண்டும்: வன்னி அரசு!

தந்தை பெரியார் சிலையை அவமதித்த நாம் தமிழர் கட்சி கும்பல் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு வலியுறுத்தி உள்ளார்.

சென்னை ஜாபர்கான்பேட்டையில் மதிமுகவினரால் தந்தை பெரியார் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சிலை அருகே நேற்று இரவு ஒரு நபர் திடீரென வந்து கும்பிட்டுள்ளார். பின்னர் காலணியால் பெரியார் சிலையை அடித்திருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், பெரியார் சிலையை அவமதித்த நபரை சுற்றி வளைத்துப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அந்த நபர், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி நிர்வாகி அஜய் என்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அஜய்யை போலீசார் கைது செய்தனர். அதேநேரத்தில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் அப்பகுதியில் ஒன்று திரண்டு சீமான் உருவப் படத்தை தீயிட்டு எரித்து காலணியால் அடித்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு கூறியுள்ளதாவது:-

புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகள் உடைக்கப்படுவதற்கும் அவமதிக்கப்படுவதற்கும் பின்னிருப்பது சாதியமும் அதை தாங்கிப்பிடிக்கும் சனாதனமும் தான். சாதிவெறியர்களை விட மோசமான சாதி- மதவாதியாக சீமான், இப்போது செயல்படுவதற்கான ஆதாரம் இது ஒன்றே போதும். தந்தை பெரியார் மீதான வெறுப்பை உமிழும் சீமானை போலவே அவர்களது தொண்டர்களும் தொடருகின்றனர். வன்முறையை தூண்டுவதற்கு ஒரு பொறுக்கி போதும். ஆனால்,வன்முறையை கட்டுப்படுத்த நல்ல தலைவன் தேவை. தலைவர்கள் சிலையை அவமதித்து வன்முறையை தூண்டி சமூகப்பதற்றத்தை உருவாக்கும் சமூகவிரோத நாதக கும்பலை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.