தமிழ்நாட்டின் மதுரை, கோவை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு புறக்கணிப்பது ஏன்? என்று மதுரை லோக்சபா தொகுதி எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
நாடாளுமன்ற லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது சு.வெங்கடேசன் எம்பி பேசியதாவது:-
உலக மக்கள் தொகையில் 20 சதவிகித மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா உலக வர்த்தகத்தில் 2 சதவிகிதத்தை மட்டுமே தன் பங்காகக் கொண்டிருக்கிறது. சேவைத்துறையில் 4.6 சதவிகிதமும், உலக சுற்றுலாத்துறையில் 1.5 சதவிகதமும் மட்டுமே நம்முடைய பங்காக இருக்கிறது. நம்முடைய இந்த பின் தங்கிய நிலைக்கு நாம் தான் காரணம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் சீனாவின் டீப்சீக் AI உலக அளவில் இன்றைக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கையைத் துவங்கிவிட்டார்கள். ஆனால் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம். இந்தியாவினுடைய பெருமை மிகுந்த கல்வி நிறுவனமான சென்னை IIT யின் இயக்குநர் “தான் தினமும் கோமூத்திரம் குடிப்பதாகவும், அதற்கு மருத்துவக் குணம் இருப்பதாகவும் சொல்கிறார்” . போலி மருத்துவத்தை, போலி அறிவியலை பரப்புகிற வேலையைச் செய்கிறார்கள்.
ஒரே தேசம் ஒரே வரிவிதிப்புக் கொள்கையைப் பற்றிப் பேசுகிறீர்கள். ஒரு சதமான மக்களிடம் 40 சதமான வருமானம் சென்று சேருகிறது. அந்த ஒரு சதம் மக்களுக்கு போதுமான வரியை விதித்தால், மீதமுள்ள 99 சதமானோருக்கு வரி செலுத்த வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் நீங்கள் யார் பக்கம் இருக்கிறீர்கள் என்பதற்கு அது உதாரணம். ஒரு பாப்கார்னுக்கு மூன்று விதமான வரியை விதிக்கிறீர்கள். பொட்டலம் கட்டாத பாப்கார்னுக்கு 5% வரி. அட்டைப் பெட்டியிலே இருக்கிற பாப்கார்னுக்கு 12% வரி. இனிப்பு தடவிய பாப்கார்னுக்கு 18% வரி.
நண்பர்களே, ஜனாதிபதி உரையில் இருக்கிற விசயம், இந்த அரசு தமிழ்நாட்டின் தேவையை மறுக்கிற அரசாக , தமிழ்நாட்டின் உரிமையை மறுக்கிற அரசாக , தமிழ்நாட்டின் பெருமையை மறுக்கிற அரசாக இருக்கிறது. 1000 கிலோமீட்டர் பயணப்பாதையை மெட்ரோ ரயில் மூலம் உருவாக்கி இருக்கிறோம், உலகின் மூன்றாவது பெரிய நாடு என்று இந்த அரசு பெருமையோடு சொல்கிறது. நான் கேட்கிறேன், இந்த ஆயிரம் கிலோமீட்டரில் தமிழ்நாட்டில் இயங்குகிற மெட்ரோவின் அளவு எவ்வளவு தெரியுமா? வெறும் 54 கிலோமீட்டர் மட்டும் தான். உத்தரப் பிரதேசத்தில் 5 நகரங்களில் மெட்ரோ இயங்குகிறது. மகாராஷ்டிராவில் 4 நகரங்களில் மெட்ரோ இயங்குகிறது. குஜராத்தில் 2 நகரங்களில் மெட்ரோ இயங்குகிறது. மத்தியப் பிரதேசத்தில் 2 நகரங்களில் மெட்ரோ இயங்குகிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஒரே ஒரு நகரத்தில் மட்டும் தான் 54 கிலோமீட்டர் மட்டும் தான் மெட்ரோ இயங்குகிறது. மதுரையினுடைய மெட்ரோ எங்கே? கோவையினுடைய மெட்ரோ எங்கே ? என்று மாநில அரசு மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்புகிறது. நாங்களும் இந்த அவையிலே கேள்வி எழுப்புகிறோம். மத்திய அரசு இப்பொழுது வரை பதில் சொல்ல மறுக்கிறது. ஒதுக்கீடு செய்ய மறுக்கிறது. இவ்வாறு சு.வெங்கடேசன் எம்பி பேசினார்.