பாஜகவின் திட்டம் திருப்பரங்குன்றம் முருகனிடம் பலிக்காது: செல்வபெருந்தகை!

பாஜகவின் திட்டம் திருப்பரங்குன்றம் முருகனிடம் பலிக்காது என்று கூறியுள்ள காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வபெருந்தகை, மதக் கலவரம் ஏற்படுத்த முயற்சிப்போரை தமிழக அரசு அடக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்துள்ளது. இதில் இஸ்லாமியர்கள் கந்தூரி கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கே சொந்தம் என்று திடீரென பாஜக, இந்து முன்னணி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக 144 தடை உத்தரவு போடப்பட்டு, தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. திருப்பரங்குன்றம் மலையிலும் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தற்போது திருப்பரங்குன்றத்தில் சூழல் சுமூகமான நிலைக்கு திரும்பியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செல்வபெருந்தகை கூறியதாவது:-

மத நல்லிணக்கத்தை கெடுப்பதற்கு ஒரு கும்பல் கையில் எடுத்துள்ளது. நாளை காங்கிரஸ் சார்பாக எங்கள் தலைவர்களுடன் திருப்பரங்குன்றம் ஆலய வழிபாடு செய்ய உள்ளோம். அதேபோல், சிக்கந்தர் பாதுஷாவையும் வழிபட இருக்கிறோம். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம். தமிழக அரசு மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.

அந்நிய முதலீடு, தொழிற்சாலை உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, கல்வி புரட்சி என்று ஏராளமான முன்னேற்றம் நடந்து வருகிறது. இதனை கெடுப்பதற்கு ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி அமைப்புகள் பாஜகவின் துணையுடன் தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற முயற்சிக்கிறார்கள். இப்படியான சக்திகளை ஜனநாயக சக்திகள் அடையாளம் காண வேண்டும். அரசியல் வேறு , ஆன்மீகம் வேறு. அரசியலை ஆன்மீகத்தில் கலக்க கூடாது. இதனை மதக் கலவரம் ஏற்படுத்த முயற்சிப்போரை இரும்புக்கரம் கொண்டு தமிழக அரசு அடக்க வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை மென்மையாக இருக்க கூடாது.

ஏற்கனவே எல்.முருகன் தலைவராக இருந்த போது, வேல் யாத்திரை நடத்தி தேர்தலில் படுதோல்வியை சந்தித்தார். தற்போது மீண்டும் முருகனை கையில் எடுத்துள்ளார்கள். திருப்பரங்குன்றத்தில் ஒருவர் போட்டியிடுவதற்காக, அந்த தொகுதியில் எம்எல்ஏ-வாக வர வேண்டும் என்று ஒருவர் முயற்சிக்கிறார். அதற்காக எல்லா குறுக்கு வழிகளிலும் செயல்படுகிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. மதக் கலவரம், சாதிக் கலவரத்தை தூண்டுவோரிடம் மென்மையான போக்கு தேவையில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.