விசாரணை அறிக்கை நகல் கோரி பொன். மாணிக்கவேல் மனுவுக்கு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

சிலை கடத்தல் வழக்கின் முதல் கட்ட விசாரணை அறிக்கை நகல் கேட்டு ஓய்வு பெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேல் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஓய்வு பெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேல். இதே பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற டிஎஸ்பி காதர்பாட்ஷா, சிலை கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளி தீனதயாளனை தப்பிக்க வைக்க பொன். மாணிக்கவேல் முயன்றார். இதற்கு இடையூறாக இருந்த என் மீது வழக்கு பதிவு செய்தார். இது தொடர்பாக பொன். மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்து, பொன் மாணிக்கவேல் மீதான புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சிபிஐ முதல் கட்ட விசாரணை நடத்தி பொன். மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்தது.

இந்நிலையில், பொன்.மாணிக்கவேல், தன் மீதான வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 2024 ஆகஸ்ட் மாதம் சிபிஐ தாக்கல் செய்த முதற்கட்ட விசாரணை அறிக்கையின் நகல் கேட்டு விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், முதல் தகவல் அறிக்கை தவிர்த்து பிற ஆவணங்களை வழங்க முடியாது என உத்தரவிட்டது. இதை ரத்து செய்து சிபிஐ முதற்கட்ட விசாரணை அறிக்கையின் நகலை வழங்க உத்தரவிடக்கோரி பொன். மாணிக்கவேல் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில், “விசாரணை அதிகாரியை தொடர்பு கொள்ள இயலவில்லை. இதனால் 4 வார கால அவகாசம் வழங்க வேண்டும்” எனக் கூறப்பட்டது. பின்னர் நீதிபதி, “உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தொடங்கப்பட்டதன் காரணமே வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காணப்பட வேண்டும் என்பதே. தற்போது மின்னஞ்சல், வாட்ஸ்அப் எனத் தொலைத்தொடர்பு சாதனங்களின் பங்கு அதிகரித்துள்ள சூழலில், விசாரணை அதிகாரியை தொடர்பு கொள்ள இயலவில்லை எனக் கூறி, கால அவகாசம் கோருவதை ஏற்க இயலாது. இது தொடர்பாக சிபிஐ பதிலளிக்க வேண்டும். விசாரணை பிப்.24-க்கு தள்ளிவைக்கப்படுகிறது” என உத்தரவிட்டார்.