சென்னை விமான நிலையத்தில் பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு!

நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். நேற்று தாயகம் திரும்பிய அவருக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

நெதர்லாந்து நாட்டின் விஜிக் ஆன் ஜீ நகரில் நடைபெற்ற 87-வது டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த ஆர்.பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். 13 சுற்றுகளின் முடிவில் பிரக்ஞானந்தாவும், உலக சாம்பியனும் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷும் தலா 8.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இதையடுத்து நடைபெற்ற டைபிரேக்கரில் பிரக்ஞானந்தா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா நெதர்லாந்தில் இருந்து விமானத்தில் துபாய் வழியாக நேற்று காலை சென்னை வந்தடைந்தார். அவருக்கு, சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பிரக்ஞானந்தா கூறியதாவது:-

கடந்த 85 வருடத்திற்கு மேலாக நடைபெற்று வரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் வெற்றி பெற்றுள்ளேன். இந்த தொடரில் அதிக அளவிலான உலக சாம்பியன்கள் விளையாடிய நிலையில் சாம்பியன் பட்டம் வென்றது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. கடந்த ஆண்டு பாதியில் என் ஆட்டம் நன்றாக இல்லை. தற்போது 2025-ம் ஆண்டில் முதல் தொடரிலேயே வெற்றி பெற்றுள்ளேன். இந்த தொடருக்காக நிறைய பயிற்சிகள் எடுத்து வந்தேன்.

இந்த ஆண்டில் முக்கிய செஸ் தொடர்கள் நடைபெற உள்ளது. இதனால் தற்போதைய வெற்றியை முக்கியமான ஒன்றாக பார்க்கிறேன். இந்த தொடரில் நான் விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் மகிழ்ச்சியாகவே விளையாடினேன். கடைசி சுற்று மட்டும் பதற்றமாக இருந்தது. சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்க நடத்தப்பட்ட டை பிரேக்கரில் விளையாடிய நானும், குகேஷும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இதில் யார் வெற்றி பெற்றிருந்தாலும் நமக்கு தான் அந்த பட்டம் கிடைத்திருக்கும். இது மிகவும் பெருமைக்குரிய ஒன்று. இவ்வாறு பிரக்ஞானந்தா கூறினார்.